தமது சட்டரீதியான உரிமையைப் பயன்படுத்தும் ஆர்ப்பாட்டக்காரர்களைக் குற்றவாளிகளாக்குவதற்கு பயங்கரவாதத் தடைச்சட்டம் உள்ளிட்ட தேசிய பாதுகாப்புச்சட்டங்களைப் பயன்படுத்துவதை அரசாங்கம் தவிர்க்க வேண்டும் என அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான உரிமை தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் கிளெமென்ட் நியாலெற்சொஸி வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான சுதந்திரத்தை தடுக்கும் வகையில் அரசாங்கத்தினால் அடக்குமுறைகள் பிரயோகிக்கப்பட்டதாக எமக்குத் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.
குறித்த தரப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கான காரணம் மற்றும் அவர்களது அதிருப்தி என்னவென்பதை அறிந்துகொள்வதற்கான கலந்துரையாடல்களில் ஈடுபடுவதற்குப் பதிலாக, நிறைவேற்றுத் தீர்மானத்தின் ஊடாக அந்த ஆர்ப்பாட்டங்கள் அடக்கப்படுகின்றன.
அதுமாத்திரமன்றி பெரும்பாலான சந்தர்ப்பங்களில் ஆர்ப்பாட்டங்களுக்கான விடையாக பொலிஸார் பிரசன்னமாவதுடன், அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான உரிமையை மீறும் வகையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்படுகின்றனர்.
போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களுடன் தொடர்புடைய விவகாரங்களுக்கான பொறுப்புக்கூறல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சமத்துவமான சமூக மற்றும் பொருளாதாரக் கொள்கைகள், சிறந்த வேலைச்சூழல் மற்றும் கல்விக்கான உரிமை உள்ளிட்ட பல்வேறு விடயங்களைக்கோரி அமைதியான முறையில் போராடும் ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எனவே இலங்கை அரசாங்கம் அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான உரிமை தொடர்பில் தெளிவானதும், சட்டத்திற்கு அமைவானதுமான வழிகாட்டல்களைத் தயாரிக்க வேண்டியது அவசியமாகும்.
அத்தோடு அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான தமது சட்ட உரிமையைப் பயன்படுத்தும் ஆர்ப்பாட்டக்காரர்களைக் குற்றவாளிகளாக்குவதற்கு பயங்கரவாதத்தடைச்சட்டம் உள்ளிட்ட தேசிய பாதுகாப்புச்சட்டங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும் அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.
அதுமாத்திரமன்றி ஆர்ப்பாட்டக்காரர்கள்மீது கண்ணீர்ப்புகை, நீர்த்தாரைப்பிரயோகம் என்பன மேற்கொள்ளப்பட்டமை மற்றும் பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தியமைக்காகப் பாதுகாப்புப்படையினரால் துப்பாக்கிச்சூடு நடாத்தப்பட்டமை ஆகிய சம்பவங்கள் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில் அரசாங்கமானது அர்த்தமுள்ள பாதுகாப்புக் கட்டமைப்பில் மறுசீரமைப்பை மேற்கொள்வதுடன், இராணுவமயமாக்கலை முடிவிற்குக் கொண்டுவரவேண்டும்.
அத்தோடு பாராளுமன்றப் பேரவை, காணாமல்போனோர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு உள்ளிட்ட முக்கிய கட்டமைப்புக்கள் உரியவாறு இயங்குவதற்கு அவசியமான உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்று அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
Post a Comment