நாடு முழுவதிலும் பல மாதங்களாக நடைபெற்ற வெகுஜனப் போராட்டங்களைத் தொடர்ந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஜூலை 15 அன்று பதவி விலகி நாட்டை விட்டு வெளியேறினார்.
அவருக்குப் பின் வந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 17 ஜூலை 2022 அன்று மற்றுமொரு அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தினார். இலங்கை நாடாளுமன்றம் தற்போதைய அவசரகால நிலையை மேலும் ஒரு மாதத்திற்கு நீடித்தது.
இதன் மூலம் ஊரடங்கு உத்தரவை விதித்து பாதுகாப்புப் படைகளுக்கும், இராணுவத்திற்கும் பரந்த மற்றும் விருப்பமான அதிகாரங்களை வழங்கும் கட்டளைச் சட்டத்திற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
அவசரகால நடவடிக்கைகளை தவறாகப் பயன்படுத்துவது குறித்து பலமுறை அரசாங்கத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அதில் பலனில்லை.
இந்தநிலையில் அமைதியான ஒன்றுக்கூடல் மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமைகளை சட்டப்பூர்வமாகப் பயன்படுத்துவதை மீறும் வகையில் இதுபோன்ற நடவடிக்கைகளை கண்டிப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன்போது பாதுகாப்புப் படையினர் அவசரகால நடவடிக்கைகளால் தங்களுக்கு வழங்கப்பட்ட விரிவான அதிகாரங்களைப் பயன்படுத்தி கண்ணீர்ப்புகை மற்றும் நீர் தாரைகளை பயன்படுத்தி எதிர்ப்பு இயக்கத்தை ஒடுக்கினர்.
2022 ஜூலை 22 அன்று தலைநகர் கொழும்பில் காலி முகத்திடலில் உள்ள போராட்டக்காரர்களின் முகாமில் காவல்துறை மற்றும் இராணுவத்தின் கூட்டு நடவடிக்கையின்போது 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பலர் கைது செய்யப்பட்டனர்.
கடந்த வாரங்களில் ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கமைப்பதில் ஈடுபட்டுள்ளவர்கள், எதிர்ப்பாளர்கள் மற்றும் எதிர்கட்சி அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இதனை கண்டித்துள்ள ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள், தேசிய பாதுகாப்பை ஒரு சாக்குப்போக்காக கொண்டு கருத்து வேறுபாடுகளின் வெளிப்பாடுகளை மூடிவிட முடியாது என்று குறிப்பிட்டுள்ளனர்.
அரசாங்கம் மீண்டும் மீண்டும் அவசரகால நடவடிக்கைகளைப் பயன்படுத்துவதை நிறுத்துமாறும் அதற்குப் பதிலாக பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தைக் குறைப்பதற்கு அரசியல் மற்றும் பொருளாதார சீர்திருத்தங்கள் குறித்து இலங்கையர்களுடன் திறந்த மற்றும் உண்மையான உரையாடலை நாடுமாறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை நிபுணர்கள் கோரியுள்ளனர்.
Post a Comment