Ads (728x90)

அரசாங்கத்தின் அடக்குமுறை போக்கை நிறுத்தக் கோரியும், பயங்கரவாத தடை சட்டத்தை இரத்து செய்ய வலியுறுத்தியும் கொழும்பில் நேற்று புதன்கிழமை பாரிய ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற நிலையில் பொலிஸாரால் அதற்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டது.  

ஆட்சியாளர்களின் தொலைநோக்கற்ற அரசியல் முடிவுகளாலும், பரவலாக நடைபெறும் ஊழல்களாலுமே இப்பொருளாதாரச் சிக்கல்கள் ஏற்பட்டதாக பல்வேறு சுலோகங்களை தாங்கிய ஆர்ப்பாட்டக்காரர்கள், பயங்கரவாத தடை சட்டம் உள்ளிட்ட அடக்குமுறை சட்டங்களை உடனடியாக மீளப் பெற்று, ஜனநாயகத்தை உறுதி செய்யுமாறு வலியுறுத்தினர்.

மருதானை எல்பிஸ்டன் திரையரங்கம் அருகே இருந்து நேற்று பிற்பகல் 3.30 மணிக்கு ஆர்ப்பாட்டப் பேரணி ஆரம்பமானது.

ஐக்கிய மக்கள் சக்தி, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, முன்னிலை சோசலிசக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, 43 ஆம் படையணி, சுதந்திர மக்கள் சபை உள்ளிட்ட சுமார் 20 அரசியல் கட்சிகளும் சுமார் 150 தொழிற்சங்கங்களும் அரசாங்கத்தின்  இந்த பேரணிக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

இந்நிலையில் ஆயிரக்கணக்கான பொலிஸாரை கொண்டு புறக்கோட்டை மிதக்கும் சந்தைக்கு அருகே உள்ள சந்தைப் பகுதியில் பிரதான பாதையை மூடி , நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகைப்பிரயோகம் செய்ய பொலிசார் தயாராக இருந்த நிலையில் ஆர்ப்பாட்டத்தை மறித்து இடையூறு விளைவித்தனர்.

பொலிஸ் மனிதச்சங்கிலி வேலியை கண்டு முன்னே சென்ற அரசியல்வாதிகள் உள்ளிட்டோர் அவ்விடத்தில் தரித்து நின்றனர். இந்நிலையில் பின்னால் வந்த ஆர்ப்பாட்டக் காரர்கள், பொலிஸாரை மீறி கோட்டை நோக்கி செல்லுமாறு அரசியல்வாதிகளை வலியுறுத்தினர்.

இதனால் பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் அங்கிருந்து எதிர்ப்புக்கு மத்தியில் வெளியேற வேண்டி ஏற்பட்டது. எனினும் ஹிருணிகா பிரேமச்சந்திர, முஜிபுர் ரஹ்மான் போன்ற அரசியல் பிரமுகர்கள் இறுதிவரை ஆர்ப்பாட்டக்காரர்களுடன் அவ்விடத்திலிருந்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.  

முன்னிலை சோஷலிஷக் கட்சியினர், தொழிற்சங்க பிரதிநிதிகளும், சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் அவ்விடத்தில் மாலை 6.10 மணி வரை நின்றனர்.

ஒரு கட்டத்தில் கலக தடுப்பு பொலிசார் ஆர்ப்பாட்டக்காரர்களை பின்நோக்கி நகர்த்த முற்பட்டாலும் அது  சிறிது தூரத்துக்கு அப்பால் சாத்தியமற்று போனது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மக்கள், அரசியல் தலைமைகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியதுடன், ஜனாதிபதி ரணிலுக்கு எதிராகவும், அடக்குமுறைக்கு எதிராகவும் தொடர்ச்சியாக சுமார் இரண்டரை மணி நேரம் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். அதன் பின்னர் அமைதியாக கலைந்து சென்றனர்.




Post a Comment

Recent News

Recent Posts Widget