Ads (728x90)


தற்போதுள்ள பதினைந்து லட்சம் அரச ஊழியர்களை பன்னிரண்டு லட்சமாகக் குறைத்தால் பொதுச்சேவை எளிதாகப் பராமரிக்கப்படும் என பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே. மாயாதுன்ன தெரிவித்தார்.

இதுவரை காலமும் அரச சேவைக்கான ஆட்சேர்ப்பு வெற்றிடங்களை நிரப்புவதற்கு அல்லாமல், மாறாக அரசாங்கத்தின் பல்வேறு கொள்கைத் தீர்மானங்களினூடாகவே மேற்கொள்ளப்பட்டன என்றும் அவர் தெரிவித்தார்.

ஒவ்வோர் ஆண்டும் சுமார் இருபதாயிரம் அரச ஊழியர்கள் ஓய்வு பெறுவதுடன், இதே எண்ணிக்கையை மீண்டும் அரசபணியில் அமர்த்தும் திட்டமும் சில காலமாக நடைமுறையில் உள்ளது.

ஆனால் தற்போது பொதுச்செலவினங்களைக் குறைக்கும் வேலைத்திட்டத்தின் ஊடாக அரச சேவைக்கான புதிய ஆட்சேர்ப்புகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி ஓராண்டில் சுமார் இருபதாயிரம் அரச ஊழியர்கள் ஓய்வு பெற்றாலும், இவ்வளவு தொகை மீண்டும் அரசுப் பணியில் சேர்க்கப்படாது.

இந்த வேலைத்திட்டத்தின் மூலம் அடுத்த சில வருடங்களில் அரச சேவையை படிப்படியாக குறைக்க முடியும் எனவும் செயலாளர் தரிவித்தார்.

மேலும் ஐந்து வருட காலத்துக்கு அரச உத்தியோகத்தர்களை வெளிநாட்டு வேலைகளுக்கு அனுப்புவதன் மூலம் அரச சேவையை திட்டமிட்ட வகையில் குறைக்கும் வாய்ப்பு உள்ளதாகவும், இந்த வேலைத்திட்டத்தின் மூலம் எந்தவொரு அரச உத்தியோகத்தருக்கும் அநீதி இழைக்கப்பட மாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஓய்வு பெறும் வயதை அறுபது ஆண்டுகளாகக் குறைத்ததன் மூலம் இந்த ஆண்டு இறுதியில் சுமார் இருபத்தைந்தாயிரம் அரச ஊழியர்கள் ஓய்வு பெற உள்ளனர்.



Post a Comment

Recent News

Recent Posts Widget