Ads (728x90)

இலாபம் தரும் நிறுவனங்களை வெளிநாடுகளுக்கு விற்பதற்கான மறைமுக நிகழ்ச்சி நிரலை மேற்கொண்டு வருவதாக யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினரும் லங்கா சமசமாஜ கட்சியின் தலைவருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி சர்வகட்சி மாநாட்டை கூட்டியபோதும் தீர்க்கமான முடிவுகள் ஏதுமின்றி தான் கூட்டத்தை நடத்தி முடித்திருக்கிறார். இதுவும் ஒரு மறைமுக நிகழ்ச்சி நிரலாகியுள்ளது.

சர்வகட்சி கூட்டத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சமஷ்டி கோரிக்கை உள்ளிட்ட பல விடயங்களை முன்வைத்திருந்தார்கள். சமஷ்டி என்கையில் தென்னிலங்கை சிங்கள இனவாதிகள் நாட்டை பிரிக்கப்போகிறார்கள் என்று இனவாதத்தை கக்கி வருகிறார்கள். இது இன்று நேற்றல்ல காலகாலமாகவே இடம்பெற்று வருகிறது. அதனால் நாம் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை முன்னோக்கிக் கொண்டுசெல்ல வேண்டும்.

இலாபம் தருகின்ற ஸ்ரீலங்கா டெலிகொம் மற்றும் இலங்கை மின்சார சபை முதலான நிறுவனங்களை தனியாருக்கும் வெளிநாட்டுக்கும் விற்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது. ஆனால் நாட்டில் இளைஞர், யுவதிகள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.

என்சிசி - சோபா ஒப்பந்தத்தை நிறைவேற்ற இரகசியமாக வேலைகள் இடம்பெற்று வருகின்றன. அவ்வாறான நிலை ஏற்படுமானால் அமெரிக்க இராணுவம் வந்து, நிலைமை இன்னும் மோசமாகும். அதன் பின்னர் அவர்களுக்கு எதிராக எதுவும் செய்ய முடியாது.

தோட்ட தொழிலாளர்களை உரிமையாளர்களாக மாற்றி, குறிப்பிட்ட நிலங்களை அவர்களுக்கு வழங்கினால் அவர்கள் முழுமூச்சாக பாடுபடுவதன் மூலம் டொலர்களை பெறலாம். அத்துடன் தேயிலை, இறப்பர் மூலமும் பெருமளவு டொலர்களை பெற முடியும்.

செவிடன் காதில் ஊதிய சங்கு போல அரசாங்கம் இருக்கிறது. கடந்த அரசாங்கம் பல பொருட்களின் இறக்குமதியை தடை செய்தது. ஆனால் இந்த அரசோ தடையை தளர்த்தி டொலரை இல்லாமல் செய்துள்ளது. இந்நிலையை மாற்ற வேண்டும். 

லங்கா சமசமாஜ கட்சி யாழ்ப்பாணத்தில் சாவி சின்னத்தில் எதிர்வரும் காலத்தில் போட்டியிடவுள்ளது. எனவே இன, மத பேதமில்லாமல் அனைவரும் எம்மோடு சேர வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget