கடந்த புதன்கிழமை கொழும்பில் நடைபெறவிருந்த கூட்டத்திற்கு 30 நிமிடங்கள் தாமதமாக வந்ததற்காக சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவல் மற்றும் அவரது அதிகாரிகளை தென் கொரிய பேரிடர் நிவாரண அறக்கட்டளையின் தலைவர் சோ சுங் லியா கண்டித்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த கூட்டம் முற்பகல் 9 மணிக்கு ஆரம்பிக்கும் என்று திட்டமிடப்பட்டிருந்த போதிலும், முற்பகல் 9.30 மணிக்குப் பிறகுதான் அமைச்சர் அந்தக் கூட்டத்துக்கு சென்றுள்ளார்.
திட்டமிடப்பட்ட கூட்டத்தை 30 நிமிடங்கள் தாமதமாகத் தொடங்குவது நல்ல அறிகுறி அல்ல. வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கும், சரியான நேரத்தில் செயல்படுவதற்கும் அமைச்சர்கள் பொறுப்பேற்க வேண்டும்.
தென்கொரியாவில் இது நடந்திருந்தால் இதுபோன்ற அதிகாரிகள் விசாரிக்கப்பட்டு, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும் என்று தென்கொரிய அதிகாரி தெரிவித்திருந்தார்.
எனவே இதுபோன்ற அமைச்சர்களை சந்திப்பதில் எந்த பயனும் இல்லை என்றும் அவர் கூறியிருந்தார். ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு ஒரு கூட்டம் திட்டமிடப்பட்டால் அது அந்த நேரத்தில் ஆரம்பிக்கப்படல் வேண்டும். அத்தகைய அமைச்சர்களால் அதைச் செய்ய முடியாவிட்டால் அவர்களை சந்திப்பதில் எந்த அர்த்தமும் இல்லை என்று லியா தெரிவித்திருந்தார்.
இலங்கையில் பொய் சொல்வதும், வாக்குறுதி கொடுப்பதும் சாதாரண விடயமாகி விட்டது. அது அவர்களின் கலாசாரத்தின் அங்கமாகிவிட்டது. இலங்கையில் உள்ளவர்களால் அந்தப் பழக்கத்தை மாற்ற முடியாவிட்டால் நாடு வெளிநாட்டவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்த முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்
Post a Comment