இலங்கைக்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டு வருகை தந்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி.ஜெய்சங்கருக்கும், தமிழ்தேசியப் பரப்பில் உள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையில் ஒருமித்த சந்திப்பு நேற்று கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் நடைபெற்றது.
இச்சந்திப்பில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் சரித்திரீதியாக காணப்படுகின்ற உறவுகள் பற்றி சுட்டிக்காட்டியதுடன் தமிழ் மக்கள் இலங்கையின் பாகத்தில் சரித்திரபூர்வமாக வாழ்ந்து வருகின்றனர். ஆகவே அந்த மக்கள் உள்ளக சுயநிர்ணய உரித்துக்கு சொந்தமுடையவர்கள். இது ஐக்கிய நாடுகள் சாசனத்திலும் காணப்படுகின்றது உள்ளிட்ட விடயங்களை சம்பந்தன் சுட்டிக்காட்டினார்.
இச்சமயத்தில் குறுக்கீடு செய்த அமைச்சர் ஜெய்சங்கர், நாட்டின் பொருளாதார நிலைமைகள் மிகவும் சீர்குலைந்துள்ள இவ்வாறான நிலையில் அடுத்த கட்டம் நோக்கி உங்களது நிலைப்பாடுகள் எவ்வாறு உள்ளன என்று கோரியுள்ளார்.
அதன்போது அதிகாரங்கள் பகிரந்தளிக்கப்பட்டு தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு காணப்பட வேண்டும். அதன் ஊடாகவே அனைத்து விதமான பிரச்சினைகளுக்கும் தீர்வினைக் காண முடியும் என்றும் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தில் இந்தியா கரிசனை கொண்டுள்ளது. அதற்கமைவாகவே 1987ஆம் ஆண்டு இலங்கை-இந்திய ஒப்பந்தம் செய்யப்பட்டு அரசியலமைப்பில் 13ஆவது திருத்தச்சட்டம் மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் அது இன்னமும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என தெரிவித்தார்.
இதனையடுத்து கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஒற்றையாட்சிக்குள் 13ஆவது திருத்தச்சட்டத்தினை ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு முழுமையான சமஷ்டி அடிப்படையில் தான் தமிழர்களுக்கான தீர்வு அமைய முடியும். அதன் மூலம் அந்த மக்களின் தேசம் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றார்.
இதன்போது வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், சமஷ்டிக் கோரிக்கையை நான் நிராகரிக்கவில்லை. ஆனால் இலங்கையின் அரசியலமைப்பில் 13ஆவது திருத்தச்சட்டமே காணப்படுகின்றது. அதனைக்கூட இன்னமும் முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் இழுபறியான நிலைமைகள் காணப்படுகின்றன.
இந்தியாவைப் பொறுத்தவரையில் 13ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துவது தான் உடனடியாகச் சாத்தியமாகவுள்ளது. ஆகவே 13ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு நாம் அரசாங்கத்திற்கு தொடர்ந்தும் அழுத்தங்களை வழங்குவோம்.
மேலும் 13ஆவது திருத்தச்சட்டத்தினை தற்போது ஏற்றுக்கொள்வதால் உங்களுடைய இலக்குகள், கோரிக்கைகள் அத்துடன் மட்டுப்படுத்தப்பட்டு விடாது. அத்துடன் 13ஆவது திருத்தசட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்தவதற்கே தயக்கங்கள் அரசாங்கத்திடம் காணப்படுகின்றபோது சமஷ்டி விடயங்கள் நீண்டகால அடிப்படையிலானது.
அதற்குள் ஏனைய விடயங்கள் முன்னெடுக்கப்பட்டு நிறைவடைந்துவிடும். ஆகவே சாத்தியமான விடயத்தினை முதலில் அணுகவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்தச் சந்திப்பில் தமிழரசுக்கட்சியின் சார்பில் இரா.சம்பந்தன், மாவை.சோ.சேனதிராஜா, எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (ஜனநாயக) சார்பில் செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன், ஸ்ரீகாந்தா ஆகியோரும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் பங்கேற்றிருந்தனர்.

Post a Comment