13 ஆவது திருத்தத்திற்கு சர்வ கட்சி கூட்டத்தில் இணக்கம் தெரிவித்து விட்டு பொது மக்கள் மத்தியில் இனவாதத்தை தூண்டி விடுகிறார்கள்.
நாட்டில் இனவாத முரண்பாடுகளை தோற்றுவித்த ராஜபக்சாக்கள் மீண்டும் ஆட்சிக்கு வரும் மார்க்கத்தை ஜனாதிபதி 13 ஆவது திருத்தம் ஊடாக காண்பித்துள்ளார்.
நாட்டு மக்கள் உண்மையை விளங்கிக் கொண்டு அவதானத்துடன் செயற்பட வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரை மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதாக குறிப்பிட்டுக் கொண்டு ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த ஆறு மாத காலமாக எதனையும் செய்யவில்லை. வெளிநாட்டு கடன்களை மீள் செலுத்த முடியாது என அரசாங்கம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதி அறிவித்தது. கடன் செலுத்தாமல் மிகுதியான 2 பில்லியன் டொலர்களை கொண்டு எரிபொருள் மற்றும் எரிவாயு இறக்குமதி செய்யப்படுகிறது.
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதாக குறிப்பிட்டுக் கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டில் தேவையில்லாத பிரச்சினைகளை தோற்றுவித்துள்ளார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் மக்களின் காணிகள் அரசுடமையாக்கப்பட்டிருந்தால் அந்த காணிகள் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். யுத்தம் முடிவடைந்து 14 ஆண்டுகள் நிறைவு பெறவுள்ள நிலையில் தொடர்ந்து காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளமை முறையற்றதாகும். பொலிஸ் அதிகாரம் தொடர்பில் பொது இணக்கப்பாட்டுக்கு வருதல் அவசியமாகும்.
அதிகார பகிர்வு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையில் பரஸ்பர வேறுபாடுகள் காணப்படுகின்றன. சர்வக்கட்சி கூட்டத்தில் 13 ஆவது திருத்தத்திற்கு இணக்கம் தெரிவித்த ஆளும் தரப்பினர் மக்கள் மத்தியில் எதிர்ப்பு தெரிவித்து இனவாதத்தை தூண்டி விடுகிறார்கள் என தெரிவித்துள்ளார்.
Post a Comment