இந்திய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் கண்டி, நுவரெலியா, மாத்தளை ஆகிய மாவட்டங்களில் 106 வீடுகளுக்கான நினைவுப் படிகங்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஜெய்சங்கர் கூட்டாக இணைந்து மெய்நிகர் ஊடாக திறந்து வைத்தனர். மேலும் கொழும்பு, திருகோணமலை ஆகிய நகரங்களிலுள்ள மாதிரிக் கிராமங்களிலும் 24 வீடுகள் மெய்நிகர் ஊடாக பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன.
இந்திய-இலங்கை கூட்டு அபிவிருத்தி திட்டங்களை துரிதப்படுத்துவதில் கவனம் செலுத்துதல், எரிசக்தித் துறையில் ஒத்துழைப்பை அதிகரிக்க முன்னுரிமை அளித்தல், சம்பூர் சூரிய மின் உற்பத்தி நிலையத்தின் நிர்மாணப் பணிகளை ஜூலை மாதம் ஆரம்பித்தல், இலங்கையில் பால் உற்பத்தித்துறை மற்றும் உர உற்பத்தியை மேம்படுத்த இந்தியாவின் ஆதரவை பெறுதல், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான எரிசக்தித்துறை தொடர்பான கூட்டுத் திட்டங்களை துரிதப்படுத்துதல் ஆகியவை குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்பில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கவனம் செலுத்தினார்.
மேலும் இலங்கையில் பால் உற்பத்தியை ஊக்குவிக்க இந்திய அரசாங்கத்தின் ஆதரவுடன் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் செயல்திறன் மற்றும் உர உற்பத்தி தொடர்பான திட்டங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
திருகோணமலையின் அபிவிருத்திக்காகவும், காங்கேசன்துறை துறைமுகத்தின் விரிவாக்கத்திற்காகவும் இந்திய அரசாங்கத்தின் அனுசரணையுடன் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
இந்திய அரசாங்கத்தின் அனுசரணையுடன் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் யாழ்ப்பாண விமான நிலையம் மற்றும் கொழும்பு இரத்மலான விமான நிலையம் ஆகியவற்றின் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
Post a Comment