Ads (728x90)

இலங்கை 26ஆம் திகதி புதன்கிழமை காலை கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்து உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவுடன் இறுதி உடன்பாடு எட்டப்பட்டுள்ளது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார் .

இலங்கை கடனை மறுசீரமைப்பதில் வெற்றி பெற்றுள்ளதால் வெளிநாட்டு நிதியைப் பயன்படுத்தி முன்னெடுத்த அனைத்து திட்டங்களையும் மீண்டும் தொடங்க சட்டபூர்வ வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

சீனாவின் எக்ஸிம் வங்கியுடன் பீஜிங்கில் இறுதி உடன்பாடு எட்டப்பட்டதோடு அதற்கான முறையான நடைமுறைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

கைச்சாத்திடப்பட்ட கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கையின் படி இலங்கை 2028ஆம் ஆண்டு வரை கடனைத் திருப்பி செலுத்த வேண்டியதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி நேற்று ஆற்றிய விசேட உரையின் போது அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.

2048ஆம் ஆண்டு வரை கடனை மீளச் செலுத்துவதற்கு சலுகையுடன் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

2022ஆம் ஆண்டில் மொத்த தேசிய உற்பத்தியில் 9.2ஆக இருந்த வெளிநாட்டு கடன் செலுத்தல் ஒதுக்கம், 2027ஆம் ஆண்டு முதல் 2032 ஆம் ஆண்டிற்குள் 4.5 ஆக குறையும். இலங்கையின் நாணயக் கடிதங்களை ஏற்க மறுத்த நாடுகள், இப்போது அவற்றுக்கு உறுதி வழங்குகின்றன என்றும் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் சரியான பயணம் தொடரும் என்பதுடன் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் அச்சுறுத்தல்களினால் தீர்வு காண முடியாது எனவும் தெரிவித்தார்.

தீர்வற்று வங்குரோத்து நிலையில் இருந்த இலங்கை இரண்டு வருடங்களில் மீண்டுள்ளது. உலகில் இவ்வாறு ஒரு சில நாடுகளே குறுங்காலத்தில் மீண்டுள்ளன.

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு கையாண்ட அதே வியூகங்கள் மூலம் இலங்கை 2048ஆம் ஆண்டில் அபிவிருத்தி அடைந்த நாடாக மாறும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget