Ads (728x90)

முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மறைந்த இரா சம்பந்தனின் இறுதிக் கிரியைகள் இன்று பிற்பகல் திருகோணமலையில் அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்றது.

மறைந்த இரா சம்பந்தன் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக மாத்திரமன்றி ஒட்டுமொத்த இலங்கை மக்களின் உரிமைகளுக்காகவும் முன் நின்ற தலைவர். சம்பந்தனும் தானும் எப்போதும் பிரிக்கப்படாத இலங்கைக்காக தம்மை அர்ப்பணித்தவர்கள் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இரா சம்பந்தனின் உடன்பாட்டுடன் முன்நோக்கி கொண்டு வந்த அந்தக் கலந்துரையாடல்களை வெற்றிகரமாக நிறைவு செய்ய அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

திருகோணமலையில் அன்னாரது இல்லத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற சம்பந்தனின் இறுதி கிரியையில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

இரா சம்பந்தனின் மரணம் தொடர்பில் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்த ஜனாதிபதி, அவரது மறைவு நீண்டகால நண்பரின் இழப்பு எனவும் குறிப்பிட்டார்.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், தமிழகத்தின் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் கே. அண்ணாமலை உட்பட பல வெளிநாட்டு தூதரகப் பிரதிநிதிகள், பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், லக்ஷ்மன் கிரியெல்ல, ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதுர்தீன், எம்.ஏ. சுமந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், மாவை சேனாதிராஜா, எஸ். இராசமாணிக்கம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி நளின் டி ஜயதிஸ்ஸ மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள், பிரதிநிதிகள் மற்றும் பிரதேசத்தைச் சேர்ந்த பெருந்தொகையான மக்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

திருகோணமலை இந்து மயானத்தில் அன்னாரின் மூத்த மகன் சம்பந்தன் சஞ்ஜீவன் சிதைக்குத் தீ மூட்டியதோடு இராஜவரோதயம் சம்பந்தனின் பூதவுடல் அக்கினியுடன் சங்கமமாகியது.


Post a Comment

Recent News

Recent Posts Widget