Ads (728x90)

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரச ஊழியர்கள் கோரும் 20,000 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்படுமாயின் தற்போது அரசுக்கு இருக்கும் செலவீனத்திற்கு மேலதிகமாக வருடாந்தம் 280 பில்லியன் ரூபா தேவை ஏற்படும். இந்த சம்பள அதிகரிப்பை வழங்க வேண்டுமாயின் தற்போதுள்ள 18% வெட் வரியை 20% - 21% ஆக அதிகரிக்க நேரிடும். எனவே அரசாங்கத்தினால் அத்தகைய கோரிக்கையை நிறைவேற்ற முடியாது என திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன தெரிவித்துள்ளார்.

இந்த வருடம் சம்பள அதிகரிப்பை வழங்கும் சாத்தியக்கூறுகள் இல்லாவிட்டாலும் 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளத்தை மீளாய்வு செய்வதற்கு நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவின் பரிந்துரைகளைக் கருத்திற் கொண்டு அடுத்த வருட வரவு செலவுத் திட்டத்தில் அதற்கான ஒதுக்கீட்டை வழங்குவதாக ஜனாதிபதி கூறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த அரசு முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளால் முன்பு போன்று மத்திய வங்கியினால் பணம் அச்சிட முடியாது எனவும் அவர் தெரிவித்தார். அவ்வாறு செய்தால் சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத் திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

அரச சேவை தொழிற்சங்கங்கள் முன்வைத்த கோரிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் திறைசேரி செயலாளர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget