தினக்குரலுக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலிலேயே விஜித ஹேரத் எம்.பி இவ்வாறு கூறியுள்ளார்.நேர்காணல் பின்வருமாறு,
கேள்வி: ஜனாதிபதித் தேர்தல் நெருங்கியுள்ளது. நாடு முழுவதும் தீவிர பிரசார நடவடிக்கைகளில் அநுரகுமார திஸாநாயக்க ஈடுபட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. இந்த நேரத்தில் அவருக்கான வாக்கு வங்கி எப்படி உள்ளது? வெற்றி வாய்ப்பு உண்டா?
பதில்: முன்னர் 3 வீத வாக்குகளே உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் இப்போது வாக்கு வீதம் 65 – 70 வீதம் வரையில் உயர்வடைந்துள்ளது. தற்போது வெற்றி வேட்பாளராக அநுரகுமார திஸாநாயக்க இருக்கின்றார். இலங்கையில் பெரும் மக்கள் பேரலை உருவாகியுள்ளது. தபால்மூல வாக்களிப்பில் அது உறுதியாகியுள்ளது. 80 வீதமான அரச ஊழியர்கள் திசைக்காட்டி சின்னத்துக்கு வாக்களித்துள்ளதாகவே தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி அதிக வீதத்தில் வெற்றிப்பெறக்கூடிய நிலையில் தேசிய மக்கள் சக்தி இருக்கின்றது.
கேள்வி: அநுரகுமார 50 வீதத்தை விடவும் அதிக வாக்குகளை பெறுவார் என்ற உறுதியான நம்பிக்கை இருக்கின்றதா?
பதில்: நிச்சயமாக அவர் 50 வீதத்திற்கும் அதிக வாக்குகளை பெறுவார். ஊடகங்களில் என்ன கூறினாலும் மக்கள் திசைக்காட்டியையே விரும்புகின்றனர்.
கேள்வி: தேசிய மக்கள் சக்தியின் கூட்டங்களுக்கு கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போதும் அதிகளவான மக்கள் வந்தனர். ஆனால் எதிர்பார்க்கப்பட்டதை விடவும் குறைவான வாக்குகளே கிடைத்தன. இம்முறை அதனை விடவும் அதிகளவான மக்கள் வருவது போன்று தெரிந்தாலும் வெல்லும் அளவுக்கு வாக்குகள் கிடைக்காது என்றும் கூறப்படுகின்றதே?
பதில்: அவ்வாறு இல்லை. கடந்த தேர்தலின் போது அநுரகுமார வெற்றிபெறும் வேட்பாளர் அல்ல. மூன்றாமிடத்திலேயே இருந்தார். கோதாபயவுக்கும் சஜித்துக்கும் இடையிலேயே போட்டி இருந்தது. கோதாபயவை தோற்கடிக்க வேண்டும் என்று நினைத்தவர்களே மற்றைய வேட்பாளருக்கு வாக்களித்தனர். எங்களை மக்கள் விரும்பியிருந்தாலும் கோதாபயவை தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மக்கள் இருந்தமையினால் வாக்குகள் வீணாகக் கூடாது என்று நினைத்து மற்றைய வேட்பாளருக்கு வாக்களித்தனர். ஆனால் இம்முறை அப்படியல்ல. பிரதான போட்டியாளராக அநுரவே இருக்கின்றார். கடந்த முறையை விடவும் மாற்றங்கள் உள்ளன. கூட்டங்களுக்கு அதிகளவில் மக்கள் கலந்துகொள்வது மட்டுமன்றி அனுரவின் வெற்றிக்காக வாக்களிக்க மக்கள் தீர்மானித்துள்ளனர்.
கேள்வி: மக்கள் அநுரவை விரும்புகின்றார்கள் என்றால், மற்றைய வேட்பாளர்களிடையே அவர் எப்படி வேறுபடுகின்றார்?
பதில்: இங்கே இரண்டு முகாம்கள் உள்ளன. மற்றைய வேட்பாளர்கள் அனைவரும் திருட்டு, ஊழல், மோசடிகளுடன் தொடர்புடைய திருடர்களை பாதுகாக்கும் குழுக்களாகும். அனுரவின் குழு திருட்டுக்கு எதிரானது. மற்றைய தரப்பில் பல வேட்பாளர்கள் இருந்தாலும் அவர்கள் அனைவரும் ஒரே முகாமே. இதனால் திருடர்களை வெற்றியடைய செய்வதா? திருடர்களுக்கு எதிரான அநுரவை வெற்றியடையச் செய்வதா? என்பதை பார்த்தே மக்கள் வாக்களிக்கவுள்ளனர்.
இதேவேளை மற்றைய வேட்பாளர்களில் சஜித் பிரேமதாச மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் முன்னாள் ஜனாதிபதிகளின் மகன்களே. ரணில் விக்கிரமசிங்க முன்னாள் ஜனாதிபதியின் மருமகன். ஆனால் அநுரகுமார திஸாநாயக்க அநுராதபுரத்தில் விவசாயியின் மகன். இதன்படி குடும்ப அரசியலுக்கு எதிரான வேட்பாளராகவும் அநுர இருக்கின்றார்.
கேள்வி: வடக்கு, கிழக்கு தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் மலையக மக்களின் வாக்குகள் யாருக்கு அதிகமாக இருக்கும் என்று நினைக்கின்றீர்கள்?
பதில்: அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல்வாதிகள் ரணில் மற்றும் சஜித்துக்கு ஆதரவளிக்கின்றனர். அவர்கள் சஜித்துக்கும் ரணிலுக்கும் ஆதரவளித்தாலும் சாதாரண மக்கள் அவர்களின் தீர்மானத்துடன் இல்லை. வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் இருந்து பெருமளவான மக்கள் எங்களுடன் இருக்கின்றனர். குறிப்பாக இளைஞர்கள், அரச ஊழியர்கள், ஆசிரியர்கள் எங்களுடனேயே இருக்கின்றனர். புதிதாக பெருமளவாக வாக்குகள் கிடைக்கும்.
கேள்வி: நீங்கள் கூறுவது போன்று அநுர வெற்றியடைந்தால் பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் அமைக்கப்படும் இடைக்கால அரசாங்கம் எப்படி இருக்கும்?
பதில்: அரசியலமைப்பின் 48ஆவது சரத்தில் இது தொடர்பான முறைமைகள் உள்ளன. எதிர் தரப்பினர் எங்களின் அமைச்சரவை தொடர்பில் கேள்விகளை எழுப்புகின்றனர். இது நாங்கள் வெற்றியடைவோம் என்பதனை அவர்களும் ஏற்றுக்கொண்டதாகவே இருக்கின்றது. எவ்வாறாயினும் 48ஆவது சரத்தில் அமைச்சரவையை அமைக்கும் மூன்று வழிகள் உள்ளன. அந்த நேரத்திற்கு மிகவும் பொருத்தமானதை தெரிவு செய்து அதனை நடைமுறைப்படுத்துவோம்.
குறிப்பாக 4 பேர் கொண்ட அமைச்சரவையை அமைக்க முடியும். அல்லது தற்காலிக காபந்து அரசாங்கத்தை அமைக்கவும் முடியும். அந்த நேரத்தில் பொருத்தமானதை தெரிவு செய்வோம்.
கேள்வி: அநுர ஜனாதிபதியானதும் அமைக்கப்படும் தற்காலிக அரசாங்கத்தில் யார் பிரதமர்?
பதில்: யார் அமைச்சர்கள், யார் பிரதமர் என்பது தொடர்பில் இப்போதே அறிவிக்க வேண்டிய அவசரம் கிடையாது. அதற்கு பொருத்தமானவர்கள் இருக்கின்றனர். ஏற்கனவே எமது மூன்று பேர் பாராளுமன்றத்தில் இருக்கின்றோம். அநுர ஜனாதிபதியானதும் அவரின் எம்.பி ஆசனம் வெற்றிடமாகும். அதற்கு ஒருவர் நியமிக்கப்பட்ட பின்னர் நான்கு பேர் அமைச்சரவையில் இருக்கலாம்.
கேள்வி: பிரதமராக உங்களை நியமிக்கலாம் என்று கூறப்படுகின்றதே.
பதில்: அதனை அந்த நேரத்தில் தீர்மானிப்போம். தனிப்பட்ட இலக்குகள் கிடையாது. பொது இலக்குகளே உள்ளன. இதன்படி மிகவும் பொருத்தமானவர் நியமிக்கப்படுவார்.
கேள்வி: பாராளுமன்ற தேர்தலின் பின்னர் எவ்வாறான அமைச்சரவை உருவாகும்? அதில் ராஜபக்ஷக்கள் மற்றும் ரணில் தரப்பினருக்கும் சந்தர்ப்பம் வழங்கப்படுமா?
பதில்: நிச்சயமாக 25 அமைச்சர்களை கொண்ட அமைச்சரவையே அமைக்கப்படும். அத்துடன் பிரதி அமைச்சர்கள் 25 பேர் நியமிக்கப்படுவர். இராஜாங்க அமைச்சர்கள் என்று எவரும் இருக்க மாட்டார்கள். இதன்போது தேசிய மக்கள் சக்தியினரை கொண்டதாகவும் தமிழ், சிங்களம், முஸ்லிம் என அனைத்து இனத்தவர்களையும் உள்ளடக்கியதாகவும் தேசிய ஐக்கிய அரசாங்கத்தை அமைப்போம். பாராளுமன்ற தேர்தலின் பின்னர் யார் யார் பாராளுமன்றத்திற்கு தெரிவாகின்றார்கள் என்பதனை பார்த்தே அதனை செய்வோம்.
கேள்வி: உங்களால் பாராளுமன்றத் தேர்தலில் உங்கள் கட்சியினால் ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மை ஆசனங்களை பெற்றுக்கொள்ள முடியாவிட்டால் அந்த இடத்தில் எவ்வாறான தீர்மானங்களை எடுப்பீர்கள்?
பதில்: ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியென்பது பாராளுமன்றத் தேர்தலிலும் வெற்றியாகவே அமையும். இதன்படி பெரும்பான்மை ஆசனங்கள் கிடைக்கும். பொறுத்திருந்து பார்ப்போம். ஜனாதிபதித் தேர்தல் பெறுபேறுகள் வந்த பின்னரே அதுபற்றி கூறலாம்.
கேள்வி: தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான தீர்வையற்ற வாகன இறக்குமதி சலுகை உள்ளிட்ட சிறப்புரிமைகளை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அநுரகுமார கூறுகின்றார். அப்படியாயின் உங்கள் அரசாங்கத்தில் நீங்கள் எடுக்கும் தீர்மானங்களுக்கு மற்றைய எம்.பிக்களின் ஆதரவுகளை பெற்றுக்கொள்ள முடியுமாக இருக்காதே.
பதில்: சலுகைகள், வரப்பிரசாதங்களை வழங்கி நாங்கள் எவரிடமும் ஆதரவுகளை பெற்றுக்கொள்ளப் போவதில்லை. அப்படி செய்வதென்றால் இப்போதே செய்யலாம். ஆனால் சிறப்பு சலுகைகளை நீக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நாங்கள் இருக்கின்றோம். அதற்கு இணங்கினால் எங்களுடன் செயற்படலாம். இல்லாவிட்டால் எமக்கு ஆதரவளிக்காது இருக்கலாம்.
கேள்வி: ஊழல் மோசடிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்குவோம் என்றும் கூறுகின்றீர்கள். அவ்வாறு தண்டனைகளை வழங்குவதற்காக அரசியலமைப்பில் ஏதேனும் மாற்றங்களை செய்ய வேண்டுமா?
பதில்: ஏற்கனவே இருக்கும் சட்டங்கள் போதுமானது. பணச் சலவைக்கு எதிரான சட்டம், ஊழல் மோசடிக்கு எதிரான சட்டம், பொதுச் சொத்துக்கள் தொடர்பான சட்டங்கள் உள்ளன. அதன்படி தண்டனைகளை வழங்க முடியும். இருக்கும் சட்டங்கள் போதவில்லை என்றால் புதிய சட்டங்களை கொண்டுவரலாம். அதற்காக அரசியலமைப்பில் இணை சட்டங்களை உள்ளடக்க நடவடிக்கை எடுக்கலாம்.
கேள்வி: ஜனாதிபதித் தேர்தலில் இந்தியா, அமெரிக்கா மற்றும் சீனா போன்ற சர்வதேச நாடுகளின் தலையீடுகள் இருப்பதாக கூறப்படுகின்றது. அவ்வாறு தலையீடுகள் இருக்குமென கருதுகின்றீர்களா?
பதில்: எமது தேர்தல் வரலாறுகளில் எப்போதும் அவ்வாறான தலையீடுகள் இருக்கும். இந்தத் தேர்தலிலும் அவர்களின் தலையீடுகள் இருக்காது என்று நினைக்கவில்லை. ஆனால் நாங்கள் எந்தவொரு சர்வதேச தலையீடுகளுக்கும் அடிபணியவில்லை. எங்களின் அரசியல் நடவடிக்கைகளை சுயாதீனமாக முன்னெடுத்து வருகின்றோம்.
கேள்வி: தேசிய மக்கள் சக்தி சீன சார்பு கொள்கையுடன் பயணிப்பதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. இதனால் இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகள் தேசிய மக்கள் சக்தி ஆட்சி உருவாகுவதை விரும்பவில்லை என்றும் கூறப்படுகின்றதே?
பதில்: அதனை நிரூபிக்க எந்த விடயமும் கிடையாது. நாங்கள் முறையான வேலைத்திட்டங்களை முன்வைத்துள்ளோம். நாட்டை கட்டியெழுப்பும் கனவு இருக்கின்றது. அதனை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணத்திலேயே நாங்கள் பயணிக்கின்றோம். எமது வேலைத்திட்டங்களில் எந்த நாட்டுக்கு சார்பான விடயங்களும் கிடையாது. வெளிநாட்டு அழுத்தங்களும் எங்களுக்கு கிடையாது. அவ்வாறு அழுத்தங்கள் கொடுக்கவும் விட மாட்டோம்.
கேள்வி: இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை வந்திருந்த போது மற்றைய அரசியல் கட்சிகளின் தலைவர்களை சந்தித்த போதும் உங்கள் தலைவர் அநுரவை சந்திக்கவில்லை. ஆனால் அண்மையில் இலங்கை வந்த இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் உங்கள் தலைவரை சந்தித்திருந்தார். ஏன் இந்த சந்திப்பு நடந்தது. அதன்போது என்ன பேசப்பட்டது?
பதில்: இந்திய வெளியுறவு அமைச்சர் இங்கு வந்திருந்த போது மற்றையவர்களை சந்தித்திருந்த போதும் எங்களை சந்தித்திருக்கவில்லை. இதற்கு காரணம் என்னவென்று தெரியாது. ஆனால் அஜித் டோவல் வந்திருந்த போது எங்களை சந்தித்திருந்தார். இதன்போது தேர்தல் தொடர்பிலும் நாட்டின் பொருளாதார நிலவரம் தொடர்பிலும் கலந்துரையாடினார். நாங்களும் இராஜதந்திர ரீதியிலான மற்றும் நட்பு ரீதியான தொடர்புகளை பேணுவதற்கு விரும்பம் தெரிவித்தோம். இலங்கையே எங்களுக்கு அருகிலுள்ள நாடு. எமது ஆசிய வலயத்தின் பாதுகாப்பு தொடர்பிலும் கலந்துரையாடினோம். வலய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் எமது நிலத்திலும் சமுத்திரத்திலும் இடமளிக்க மாட்டோம் என்பதனையும் கூறினோம். இதற்கு அஜித் டோவல் மகிழ்ச்சி தெரிவித்தார்.
கேள்வி: தேசிய மக்கள் சக்தியின் வெளியுறவுக் கொள்கை எப்படியானதாக இருக்கும்?
பதில்: கொரியா, சீனா, வியட்நாம் போன்ற நாடுகளுடன் மட்டுமே நாங்கள் கொடுக்கல் வாங்கல்களை செய்வோம் என்றும், வேறு நாடுகளுடன் கொடுக்கல் வாங்கல்களை செய்ய மாட்டோம் என்றும் கூறப்போவதில்லை. உலகம் இப்போது பண்முகத்தன்மையுடன் செல்கின்றது. இதனால் சீனா, இந்தியா, அமெரிக்கா, யப்பான் உள்ளிட்ட சகல நாடுகளுடனும் சமமான முறையில் இராஜதந்திர உறவுகளை பேணுவோம்.
எமது நாட்டில் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் உள்ளன. அதற்கு பொருத்தமான உதவிகளை வெளிநாடுகளிடம் இருந்து பெற்றுக்கொள்வோம். நாட்டுக்கு நன்மையளிக்கும் வகையிலான சர்வதேச கொடுக்கல்வாங்கல்களை முன்னெடுப்போம். ஆனால் நாட்டுக்கு பாதிப்பானவாறு சர்வதேச நாடுகளுடன் செயற்பட மாட்டோம்.
கேள்வி: உங்களுடைய தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்டுள்ள விடயங்களை எவ்வாறு செயற்படுத்தப் போகின்றீர்கள்? அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்டத்தில் அவற்றை உள்ளடக்குவீர்களா?
பதில்: சில விடயங்களுக்கு வரவு செலவுத் திட்டம் அவசியமில்லை. குறிப்பாக அரசியல் நடவடிக்கைகளுக்கு அது அவசியப்படாது. சில விடயங்கள் புதிய பொருளாதார திட்டங்களாக உள்ளன. அவற்றை புதிய பாராளுமன்றத்தில் புதிய வரவு செலவுத் திட்டத்தை முன்வைப்போம். எவ்வாறாயினும் அதற்கு முன்னர் இடைக்கால கணக்கு அறிக்கையை முன்வைப்போம். மூன்று மாதங்களுக்காக அதனை முன்வைத்து பின்னர் வேலைத்திட்டங்களுக்கு ஏற்றால் போன்று புதிய வருடத்திற்கான வரவு செலவுத் திட்டத்தை முன்வைப்போம்.
கேள்வி: நீங்கள் அரசாங்கத்தை அமைப்பதாக கூறினாலும், ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் தேர்தல் முடிவுகள் வர முன்னர் நாட்டில் குழப்ப நிலைமைகளை ஏற்படுத்தி தற்போதைய ஜனாதிபதியை தொடர்ந்தும் பதவியில் இருக்கச் செய்ய திட்டமிடப்படுவதாக விமல் வீரவன்ச தெரிவிக்கின்றார். இரண்டாவது விருப்பு வாக்கு எண்ணும் நிலைமை இம்முறை ஏற்படலாம் என்றும், அந்த காலப்பகுதியில் ஜே.வி.பியினர் பொறுமை இழந்து வன்முறைகளில் ஈடுபடலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் கூறுவது போன்று அப்படியொரு நிலைமை ஏற்படுமா?
பதில்: வீரவன்ச என்பவர் இப்போது எவராலும் கணக்கிலெடுக்கப்படாத ஒருவராக இருக்கின்றார். இதனால் மக்களின் அவதானத்தை பெற்றுக்கொள்வதற்காக இவ்வாறான கருத்துக்களை கூறுகின்றார். அவர் வேட்பாளரும் அல்ல. பொய்யான கருத்துக்களை பரப்பி தன்மீதான அவதானத்தை பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றார். அவர் கூறுவது போன்ற நிலைமை ஏற்படாது. அதேபோன்று இரண்டாவது விருப்பு வாக்கு எண்ணும் நிலைமையும் உருவாகாது. முதல் வாக்குகளை எண்ணும் போதே 50 வீதம் வாக்குகள் கிடைத்துவிடும்.
தேசிய மக்கள் சக்தி வெற்றியை உறுதிப்படுத்தியுள்ள நேரத்தில் ஏன் இவ்வாறான வன்முறைகளை செய்து தோல்வியை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அமைதியான முறையில் நாங்கள் வெற்றியை கொண்டாடுவோம்.
கேள்வி: ஜனாதிபதித் தேர்தல் நெருங்கியுள்ள இந்த நேரத்தில் நாட்டு மக்களுக்கு நீங்கள் கூறும் செய்தியென்ன?
பதில்: இதுவரைகாலம் நாட்டின் பொருளாதாரத்தை வீழ்த்தியவர்களுக்கே மாறி மாறி மக்கள் வாக்களித்தனர். மீண்டும் நாட்டை கட்டியெழுப்புதாக கூறி மக்களை ஏமாற்றி வாக்குகளை கேட்கின்றனர். இதற்கு ஏமாற வேண்டாம் என்று நாட்டு மக்களிடம் கேட்கின்றோம். 1700 ரூபா சம்பளம் தொடர்பில் கூறி அந்த மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றனர். தேர்தல் நெருங்கும் நேரத்தில் பொய்யான வாக்குறுதிகள்,அச்சுறுத்தல்களுக்கு ஏமாறாது தமது மனசாட்சிக்கு இணங்க மாற்றத்திற்காக வாக்களிக்குமாறு கேட்கின்றோம்.

Post a Comment