சர்வதேச முதலீட்டாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முறி உரிமையாளர்களின் தற்காலிக குழுவினர் மற்றும் உள்நாட்டு நிதி நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை தேசிய குழு கூட்டு நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையிலான கலந்துரையாடலின் பின்னர், தனியார் பிணைமுறி வழங்குநர்களுடனான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
நாட்டின் தனியார் பிணைமுறிகளில் 50% இற்கும் அதிகமானவற்றை இந்த குழுக்கள் கொண்டுள்ளன.
இந்த இணக்கப்பாடுகளுக்கமைய பிணைமுறிதாரர்கள் 11% தள்ளுபடி விகிதத்தின் அடிப்படையில் தற்போதைய கடன் பெறுமதியில் 40.3% தள்ளுபடியை வழங்க இணங்கியுள்ளனர்.
இந்த இணக்கப்பாடுகளுக்கு அமைய 2024 ஜூலை மாதம் ஸ்தாபிக்கப்பட்ட ஒருங்கிணைந்த செயற்பாட்டு வரைபை விடவும் பெருமளவான கடன் சலுகை இலங்கைக்கு கிடைக்கவுள்ளதோடு, புதிய நிபந்தனைகள் அடிப்படையில் வட்டிக் கொடுப்பனவிலும் குறைப்புச் செய்யப்படும்.
இலங்கை 3.3 பில்லியன் டொலர் தனியார் கடனை மறுசீரமைப்பு செய்வதற்கான நிதி நிபந்தனைகள் தொடர்பில் சீன அபிவிருத்தி வங்கியுடன் கொள்கை ரீதியான இணக்கப்பாட்டினை எட்டியுள்ளது.
சீன எக்ஸிம் வங்கி, ஸ்ரீ லங்கா உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்கள் குழு, சீன அபிவிருத்தி வங்கி மற்றும் பிணைமுறிதாரர்களுடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின் பலனாக, சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்ட காலப்பகுதிக்குள் இலங்கை 17 டொலர் பில்லியனுக்கும் அதிகமான கடன் சலுகைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
அதில் சீன எக்ஸிம் வங்கியின் 2.4 பில்லியன் டொலர்களும், உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்கள் குழுவின் 2.9 பில்லியன் டொலர்களும், சீன அபிவிருத்தி வங்கியின் 2.5 பில்லியன் டொலர்களும், பிணைமுறிதாரர்களின் 9.5 பில்லியன் டொலர்களும் அடங்கும்.
இந்த செயன்முறை முழுவதிலும் இலங்கையின் கடன் வழங்குநர்களும் சர்வதேச நாணய நிதியமும், உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்களின் செயலகமும் வழங்கிய தொடர்ச்சியான ஒத்திழைப்பிற்கு இதன்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நன்றி தெரிவித்தார்.

Post a Comment