Ads (728x90)

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுவை இம்மாதம் 14ஆம் திகதி மீண்டும் கூட்ட வேண்டியதில்லை என்ற தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட 5 பேர் கொண்ட தமிழரசுக் கட்சியின் குழு இன்று தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தீர்மானம் இன்றைய கூட்டத்தின் போது உறுதி செய்யப்பட்டதாகவும், சஜித் பிரேமதாசவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இணங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சஜித் பிரேமதாசவை சந்தித்து அவரது தேர்தல் விஞ்ஞாபனத்தில் உறுதி அளிக்கப்பட்டுள்ள விடயங்களை அமுலாக்குவதற்கான கால வரையறைகள் குறித்து கலந்துரையாடி இறுதி செய்யவும் தமிழரசு கட்சி தீர்மானித்துள்ளது.

சஜித் பிரேமதாசவை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் எம். ஏ. சுமந்திரன் எதிர்வரும் நாட்களில் சந்திப்பார் எனவும், அதன்பின் மீண்டும் குறித்த 5 பேர் கொண்ட குழு கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றிக் கருத்து வெளியிட்ட மாவை சேனாதிராஜா இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பது குறித்து கட்சியினால் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கு இசைவாக தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி விரிவான அறிக்கையொன்றை எதிர்வரும் 14 அல்லது 15 ஆம் திகதி வெளியிடுவதற்கு இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாகவும், அதற்கு சிறிதரன் உள்ளடங்கலாக சகலரும் இணங்கியதாகவும் தெரிவித்தார்.  

ஐக்கிய மக்கள் கூட்டணி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி ஏற்கனவே தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment

Recent News

Recent Posts Widget