நாட்டின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் 9 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
களனி கங்கை கொழும்பு நாகலகம் வீதி, ஹங்வெல்ல மற்றும் அத்தனகலு ஓயா தூனமலே பகுதிகள் வௌ்ள மட்டத்தை அண்மித்துள்ளதுடன் கிங் கங்கை பத்தேகம பகுதி சிறிய அளவிலான வௌ்ள மட்டத்தை அண்மித்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த பகுதிகளை அண்மித்து தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு நீர்ப்பாசன திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
நீர் மட்டம் உயர்ந்துள்ளதால் களனி கங்கையின் பல இடங்களில் முப்படையினரின் உதவியுடன் மணல் மூடைகளை பயன்படுத்தி தற்காலிக வெள்ளத்தடுப்பு அணைகளை அமைக்கும் ஏற்பாடுகள் நேற்றிரவு முன்னெடுக்கப்பட்டதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.
வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் காரணமாக தற்போது நிலவும் மழையுடனான வானிலை தொடர்ந்தும் நீடிக்கும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.
நிலவும் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள மக்களின் பாதுகாப்பு தொடர்பில் விசேட அவதானத்துடன் செயற்படுமாறும், நிவாரணப் பணிகளை வினைத்திறனாக செயற்படுத்துவதற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குமாறும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
Post a Comment