Ads (728x90)

கௌதாரி முனையில் மண் அகழ்வுக்கு அனுமதி கொடுக்க வேண்டாம் என யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் நடைபெற்ற கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கௌதாரி முனை ஒரு முக்கியமான பிரதேசம். அந்த இடம் சம்பந்தமாக உங்கள் எல்லோருக்கும் நன்றாக தெரியும். அதனை பாதுகாக்க வேண்டிய தேவை உள்ளது. எனவே அனுமதி கொடுக்கப்பட வேண்டாம் என்பது இந்த அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் தீர்மானம். இந்த முடிவுக்கு ஏற்ப செயற்பட வேண்டும் என்றார்.

வடக்கு மாகண ரீதியாகவும், மாவட்ட ரீதியாகவும் சுகாதாரம் தொடர்பில் எதிர்கால திட்டமிடல் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா சுட்டிகாட்டிய நிலையில் சுகாதார தரப்பு அதனை ஒப்புக் கொண்டுள்ளது.

இதன் போது பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளரை நோக்கி மாகாணம் தளுவிய எதிர்கால திட்டமிடல் உள்ளதா என மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரை கேட்டபோது இல்லை என அவர் தெரிவித்தார்.

மாவட்ட ரீதியான திட்டமிடல் உள்ளதா என அவரிடம் கேட்ட போது இல்லை என அவர் தெரிவித்தார். வைத்தியசாலை தொடர்பான எதிர்கால திட்டங்கள் தொடர்பில் கேட்ட போது அவை உள்ளதாக தெரிவித்தார்.

சில இடங்களில் 2035 வரையான எதிர்கால திட்டங்கள் வரையப்பட்டுள்ள நிலையில் நாங்கள் மாகாண ரீதியிலும், மாவட்ட ரீதியிலும் எதிர்கால திட்டமிடல் இல்லாமல் அபிவிருத்தி உள்ளிட்ட விடயங்களை பேசுகிறோம்.

இது ஆரோக்கியமானதாக இருக்காது. வைத்தியசாலை திட்டங்கள் வர்ணம் பூசுதல் போன்ற சாதாரண திட்டங்களுடன் முடிந்துவிடுவதில்லை. அதற்கான திட்டங்களை நாங்கள் தயாரிக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தெரிவித்தார்.

மேலும் எம்மை மக்கள் பிரதிநிதிகளாக கருதாமல், துறை சார்ந்தவர்கள் எனும் அடிப்படையில் குறித்த எதிர்கால திட்டங்களை தயாரிக்க எங்களையும் உள்ளடக்க வேண்டும் என கோருகிறேன் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

எதிர்கால திட்டம் இல்லை என்பது கவலையான விடயம் என ஒருங்கிணைப்பு குழு தலைவர் அமைச்சர் சந்திரசேகர் தெரிவித்தார். நாங்கள் அவ்வாறான திட்டங்களை மாகாண ரீதியில் தயாரிக்க வேண்டும். அதன் மூலமே நாங்கள் இலக்கை அடைய முடியும்.

நான் இந்த சபையில் ஒரு விடயத்தை கூறுகின்றேன். இந்த திட்ட வரைவுகளுக்கு அர்ச்சுனா போன்றவர்களையும் உள்ளடக்க எந்த தடையும் இல்லை. அவர்களையும் இணைத்து மாகாணத்துக்கான எதிர்கால திட்டமிடல்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

குறித்த திட்ட வரைவை விரைவில் தயாரித்து தருவதாக இதன்போது வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் தெரிவித்தார். மிக குறுகிய காலத்திற்குள் அந்த திட்ட வரைவை தயாரிப்பதாகவும் இதன் போது உறுதியளித்தார்.

இன்றையதினம் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கும் தம்பிராசா மற்றும் பனை அபிவிருத்தி சபையின் தலைவர் சகாதேவன் ஆகியோருக்கு இடையே கருத்து மோதல் ஏற்பட்டது.

இந்நிலையில் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள தம்பிராசாவுக்கு யார் அனுமதி வழங்கியது? எந்த அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டது? கூட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்துபவர்களை ஏன் உள்ளே விடுகின்றீர்கள், தம்பிராசாவை வெளியே அகற்றுங்கள் என அர்ச்சுனா கூறினார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் சந்திரசேகரன் இனிமேல் பொதுமக்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதி இல்லை என தெரிவித்தார்.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget