தற்போதுள்ள அரச சேவையில் பிரஜைகள் திருப்தியடையவில்லை என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அரசாங்க சேவையை டிஜிட்டல் மயமாக்குவதன் ஊடாக பிரஜைகளுக்கு வினைத்திறனான சேவையை வழங்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
அநுராதபுரம் மாவட்டச் செயலகத்தில் நேற்று நடைபெற்ற அனுராதபுர மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எதிர்வரும் ஜுன் மாதத்திற்குள் அரச சேவையில் சரியான தரவு கட்டமைப்பு ஒன்றை தயாரிப்பதற்கு செயலாற்றி வருவதாகவும், தற்போது அரச சேவையில் உள்ள தரவுகளின் அடிப்படையில் சரியான தீர்மானங்களை எடுப்பதற்கான இயலுமை இல்லை எனவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.
அரச ஊழியர்களுக்கான நியாயமான அடிப்படை சம்பள அதிகரிப்பு மற்றும் ஓய்வூதியம் பெறுவோரின் சம்பள முரண்பாடுகளை மூன்று வருடங்களுக்குள் முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பான முன்மொழிவுகள் இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்படும் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
அநுராதபுரம் மாவட்டத்தின் கல்வி, சுகாதாரம், நீர்ப்பாசனம், விவசாயம், காட்டு யானைகள் பிரச்சினைகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இதன்போது ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது.
அனுராதபுரம் மாவட்டத்தை சுற்றுலாப் பிரதேசமாக அபிவிருத்தி செய்வதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன்
'City Branding' முறையை பயன்படுத்தி அனுராதபுரத்தை சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இடமாக மாற்றுவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
.
Post a Comment