யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய தைப்பொங்கல் நிகழ்வில் பங்குபற்றுவதற்காக சென்றிருந்த புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி மற்றும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்திரலிங்கம் பிரதீப் ஆகியோர் நல்லை ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ ஞானசம்பந்த பரமாச்சாரிய தேசிகரைச் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டனர்.
இதன்போது செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறுதிருமுருகன் வடக்கு மாகாணத்தில் அதிகரித்துவரும் போதைப்பொருள் வியாபாரம் மற்றும் பாவனைகளை கட்டுப்படுத்துமாறு அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார்.
பாடசாலைகள் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆலயங்களுக்கு அண்மித்துள்ள மதுவிற்பனை நிலங்கள் ஆகியவற்றை அகற்றுவதற்கான நடவடிக்கைகளையும் தாமதமின்றி முன்னெடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.
இத்துடன் கீரிமலை, பலாலி வீதியை 34ஆண்டுகளாக மூடிவைத்திருக்கின்ற நிலையில் இன்னமும் அதனை திறந்துவிடாதிருப்பதில் நியாமில்லை என்று சுட்டிக்காட்டிய அவர், உயர்பாதுகாப்பு வலயங்கள் மற்றும் விடுவிக்கப்படாத பகுதிகளில் உள்ள ஆலயங்களை பாதுகாக்க வேண்டிய அவசியத்தையும் அப்பகுதிகளை விடுவிப்பதற்குரிய நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறும் கேட்டுக்கொண்டார்.
அவ்வாறு விடுவிக்கப்படாதுள்ள ஆலயங்கள் மற்றும் அவற்றுக்கான நிலங்கள் சம்பந்தமான விபரங்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநயக்கவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றும் ஆறுதிருமுருகன் குறிப்பிட்டார்.
அச்சமயத்தில் கருத்து வெளியிட்ட அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி, யாழ்ப்பாண மக்கள் எம்மீது நம்பிக்கை வைத்து வழங்கிய ஆணையை நாங்கள் மதிக்கின்றோம். அதன்காரணமாகவே நாம் தேசிய பொங்கல் விழாவை யாழில் முன்னெடுக்கின்றோம். தற்போது நாட்டில் இன ஐக்கியத்தை கட்டியெழுப்புவதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. சமூக ஒழுங்க விழுமியங்களை மேம்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
கொழும்பில் வெவ்வேறு காரணங்களுக்காக மூடிவைக்கப்பட்டிருந்த வீதிகள் இப்போது திறக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் வடக்கிலும் ஏலவே நாம் முக்கிய வீதியொன்றை திறந்துள்ளோம். ஏனைய வீதிகளும் போக்குவரத்துக்காக திறந்து வைக்கப்படும்.
ஆலயங்கள் பற்றிய விபரங்களை நீங்கள் ஜனாதிபதியிடத்தில் அனுப்பியுள்ள நிலையில் அதுபற்றிய விபரங்களை நான் அவரிடத்தில் பெற்றுக்கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைகளை விரைந்து முன்னெடுக்கின்றேன்.
பாடசாலைகள் மற்றும் வணக்க தலங்களுக்கு அருகாமையில் அமைக்கப்பட்டுள்ள மதுவிற்பனை நிலையங்கள் சம்பந்தமாக கல்வி அமைச்சுடன் இணைந்ததான செயற்றிட்டமொன்று முன்னெடுக்கப்படுகின்றது. அந்தவகையில் வடக்கு மாகாணம் சம்பந்தமாகவும் நாம் கவனம் செலுத்துவோம் என தெரிவித்துள்ளார்.
Post a Comment