ஜனாதிபதி யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்துகொண்டு மாவட்டத்தின் அபிவிருத்தி பற்றி அரச அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். யாழ்ப்பாண மாவட்டத்தில் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு வகையான பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கு மாகாணம் யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளது, அபிவிருத்தியில் பின்தங்கியுள்ளது. ஆகவே விசேட கவனம் செலுத்தி பொருளாதார ரீதியில் கிராமங்களை அபிவிருத்தி செய்வதே எமது நோக்கம் என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
இதன்போது வடக்கு மாகாணத்தின் வீதிகளை திருத்துவதற்கு எவ்வளவு நிதி தேவை என அரச அதிகாரிகளை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க கேட்க, அதற்கு பதில் கூற முடியாமல் அரச அதிகாரிகள் திக்கு முக்காடியுள்ளனர்.வடக்கு மாகாணத்தில் குறிப்பாக யாழ். மாவட்டத்தில் உள்ள கிராமங்களின் வீதிகளை புனரமைத்து, சீரமைக்க எவ்வளவு நிதி தேவை, எவ்வளவு நிதி கொடுத்தால் அனைத்து வீதிகளையும் புனரமைக்க முடியும் என கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்துடன் இந்த ஆண்டில் எத்தனை வீதிகளை புனரமைக்க முடியும் என்றும் கேட்டுள்ளார். இதற்கு வீதி அபிவிருத்தி தொடர்பில் எந்த அதிகாரிகளும் முழுமையான பதில் வழங்கவில்லை. அது என்னுடைய திணைக்களம் அல்ல, அது மாகாணத்துக்குரியது என்பது போல் மாறிமாறி பதில்களை வழங்கியுள்ளனர்.
மக்களின் காணிகள் மக்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. காணிகள் பாதுகாப்பு தேவைக்காகவும், அபிவிருத்திக்காகவும் கையகப்படுத்தப்பட்டுள்ளதென கூறப்படுகிறது. ஆனால் எமது கொள்கையிலே மக்களின் காணிகள் மக்களிடம் வழங்கப்பட வேண்டும் என்பதைக் கூறியுள்ளோம்.
எனவே மக்களின் காணி எத்தகைய அபிவிருத்திக்கானது என்பதை பார்த்து பயனுள்ளது என்றால்தான் அதனை கையகப்படுத்த முடியும். அவ்வாறு கையகப்படுத்த முடியுமென்றால் மக்களின் ஒத்துழைப்புடன் அதற்கான இழப்பீட்டை கொடுத்து, அதனை செயற்படுத்த வேண்டும். பாதுகாப்பு காரணங்களுக்காக முப்படையிடம் காணிகள் உள்ளதென்றால் பாதுகாப்பு தொடர்பில் மீளாய்வு செய்யப்பட்டு மக்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்.இதேவேளை வலிகாமம் வடக்கு கீரிமலையில் உள்ள ஜனாதிபதி மாளிகையை நாம் பயன்படுத்தப் போவதில்லை. அதனை மக்களுக்கு பயனுள்ள வகையில் பயன்படுத்த வேண்டும். அதற்கான திட்டத்தை தயாரித்து எமக்கு அனுப்புங்கள். மக்களுக்கு பயனுள்ளதாகவே அத்திட்டம் இருக்க வேண்டும்.
வடக்கு கிழக்கு மாகாணம் யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளது, அபிவிருத்தியில் பின்தங்கியுள்ளது. ஆகவே விசேட கவனம் செலுத்தி பொருளாதார ரீதியில் கிராமங்களை அபிவிருத்தி செய்வதே எமது நோக்கமாகும். அரச அதிகாரிகள் முழுமையாக வேலை செய்யவேண்டும். அதற்கு மக்கள் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரும், கடற்றொழில் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர், பாராளுமன்ற உறுப்பினர்கள், யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபன், திணைக்கள தலைவர்கள், முப்படைகளின் பிரதிநிதிகள், பொலிஸ் உயர் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், துறைசார் அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
Post a Comment