Ads (728x90)

நெல்லுக்கான உத்தரவாத விலையை நிர்ணயிக்காது அரசாங்கம் பின்வாங்குவதாக விவசாயிகள் மற்றும் விவசாய அமைப்புகள் விசனம் தெரிவித்து வந்த நிலையில் நேற்று நெல்லுக்கான புதிய உத்தரவாத விலைகளை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இதற்கமைய ஒரு கிலோகிராம் நாட்டு அரிசி நெல் 120 ரூபாவுக்கும், ஒரு கிலோகிராம் சம்பா நெல் 125 ரூபாவுக்கும், ஒரு கிலோகிராம் கீரி சம்பா நெல் 132 ரூபாவிற்கும் கொள்வனவு செய்யப்படவுள்ளதாக அமைச்சர் கே.டி.லால்காந்த தெரிவித்தார். 

கொழும்பில் உள்ள அமைச்சில் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சர் நெல்லுக்கான உத்தரவாத விலைகளை அறிவித்துள்ளார். 

அதனால் நாம் விவசாயிகளிடம் கோரிக்கை விடுக்கிறோம். நாட்டு அரிசி, சம்பா அரிசி மற்றும் கீரி சம்பா ஆகிய நெல்லினை நாம் அறிவித்த விலையினை விட குறைந்த விலைக்கு விற்பனை செய்ய வேண்டிய தேவை கிடையாது. நெற்சந்தைப்படுத்தல் அதிகாரசபையினால் இந்த விலைக்கு கொள்வனவு செய்யப்படும்.

நெல் கொள்வனவை முன்னிட்டு இன்று முதல் அறுவடை இடம்பெறும் கிளிநொச்சி, மட்டக்களப்பு, அம்பாறை, புத்தளம் மற்றும் குருநாகல் ஆகிய மாவட்ட களஞ்சியசாலைகள் திறக்கப்படவுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தலைவர் மஞ்சுள பின்னலந்த தெரிவித்தார்.

ஆனால் எவரேனும் நெற்சந்தைப்படுத்தல் அதிகார சபையின் விலையை விட அதிக விலைக்கு பெற்றுக்கொண்டால் அது பிரச்சினை கிடையாது. நாம் இந்த விலைக்கே பெற்றுக்கொள்வோம். நெல்லின் விலையை நிர்ணயம் செய்யும் போது விவசாயிகளுக்கு ஒரு கிலோவுக்கு செலவாகும் விலை உள்ளது. இந்த விலையை விவசாயிகள் பூர்த்தி செய்யப்படும் வகையிலும், இலாபத்தை பெற்றுக்கொள்ளும் வகையிலும் மூன்றில் ஒரு பங்கு சேர்த்து விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

எனவே எவரினதும் அரசியல் தலையீடு மற்றும் கொள்கைகளுக்கு அகப்படவேண்டாம் என விவசாயிகளிடம் கோரிக்கை விடுக்கிறோம். தற்போது நெற்சந்தைப்படுத்தல் அதிகாரசபையில் தெளிவாக விலை குறிப்பிடப்பட்டுள்ளது. 

உங்களுடைய நெல்லை எமக்கு வழங்குங்கள். இதன் ஊடாக அவை உரிய நேரத்தில் சந்தைக்கு கொண்டு சேர்க்கப்படும். அத்துடன் இதனை நாம் சிறிய, நடுத்த தர அரிசி உற்பத்தி ஆலையாளர்களுக்கும் விடுவிப்போம்.

நுகர்வோருக்கு பாதிக்காதவகையில் முகாமைத்துவம் செய்வதற்கு தலையீடு செய்வோம். ஆனால் கடந்த காலத்தில் நெற்சந்தைப்படுத்தல் அதிகாரசபையினால் நெல் களஞ்சிப்படுத்தப்படவில்லை. இதன் காரணமாக அரிசியில் மாபியா தலையீடு காணப்பட்டது. ஆனால் நுகர்வோர் அதிகாரசபை அரிசி சுற்றிவளைப்புகளில் ஈடுப்பட்டது. சில சந்தர்ப்பங்களில் நுகர்வோர் அதிகாரசபையும் சரியாக செயற்படவில்லை.

எனவே நாம் தற்போது இந்த விடயத்தில் தலையீடு செய்துள்ளோம். நெல்லுக்கு நிர்ணயவிலையை அறிவித்து எமது நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளோம். கடந்த காலங்களில் நிர்ணய விலை தொடர்பில் விவசாய அமைப்புகள் விமர்சனங்களை முன்வைத்தது. 

எனினும் எவர் என்ன கூறினாலும் விவசாயிகளுக்கும், நுகர்வோருக்கும் பாதிக்காத வகையில் சரியான நேரத்திலேயே விலைகளை அறிவித்துள்ளோம். தற்போது அரசியல்வாதிகளுக்கும், விவசாய அமைப்புகளுக்கும் ஏற்ற வகையில் நெற்சந்தைப்படுத்தல் அதிகாரசபை விலையை அறிவிக்கவில்லை என்றார்.



 

Post a Comment

Recent News

Recent Posts Widget