Ads (728x90)

அரச நிதியை இழப்பீடு என்ற பெயரில் கையூட்டலாக பெற்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராகத் தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலை, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அவர், கிளிநொச்சி தொடரூந்து நிலையத்துக்கான கள விஜயத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடுகையில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அரகலய போராட்டம் இடம்பெற்ற காலப்பகுதியில் தங்களது இல்லங்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கான இழப்பீடாக அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் 122 கோடி ரூபாவுக்கு அதிகமான தொகையைப் பெற்றுள்ளனர்.

அரசாங்கத்திடமிருந்து இவ்வாறான இழப்புகளுக்காக 25 இலட்சம் ரூபாவினையே உயர்ந்த பட்ச இழப்பீடாக வழங்க முடியும். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5 முதல் 10 இலட்சம் ரூபா வரையிலே இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

யுத்தத்தில் தாக்குதலுக்கு உள்ளான வீடுகளுக்கு அதிகபட்சமாக 16 இலட்சம் ரூபாவே வழங்கப்பட்டுள்ளதுடன், சிலருக்கு எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை.

ஆனால் கெஹெலிய ரம்புக்வெல்ல 900 இலட்சம் ரூபாவினை பெற்றுள்ளார். அந்த நிதியில் கிளிநொச்சியில் ஒரு கிராமத்தை அபிவிருத்தி செய்திருக்க முடியும்.

இத்தகைய சேதங்களுக்கான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளனவா என்பது தொடர்பில் ஆராயப்பட வேண்டும் என்பதுடன் இந்த இழப்பீடுகள் முற்று முழுதாக கையூட்டலாகவே வழங்கப்பட்டுள்ளன.

எனவே இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலை, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget