Ads (728x90)

யாழ்ப்பாணம் வடமராட்சியிலுள்ள எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் முகாமிட்டுள்ள இராணுவத்தினரால் நடத்தப்படும் உணவகம் ஒன்றில் அங்கு இராணுவத்தினரால் இளைஞர்களுக்கு போதைப்பொருட்கள் வழங்கப்படுகின்றன. 

சில இளைஞர்கள் அந்த இராணுவ முகாமில் ஆடையின்றி உள்ளாடைகளுடன் இருந்ததை நான் என் கண்களால் கண்டேன் என்று இலங்கைத் தமிழரசு கட்சியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தின் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சு மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பாதுகாப்பு தரப்பினரால் நெருக்கடிகளை சந்திக்கும் தேசிய இனமாக தமிழினம் இன்றும் உள்ளது. நாட்டில் 3,17,000 படையினர் வரை இருப்பதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன. மக்கள் தொகை 2 கோடியே 21 இலட்சத்து 81,000 பேர். இதன் அடிப்படையில் 14 பேருக்கு ஒரு படையினர் என்ற வகையில் உள்ளது. இது வடக்கு மற்றும் கிழக்கில் 6 பேருக்கு ஒரு படை வீரர் என்ற வகையில் உள்ளது. இதில் நாட்டில் உள்ள படைகளில் நான்கில் மூன்று பங்கு படையினர் வடக்கு, கிழக்கில் குவிக்கப்பட்டுள்ளார்கள். இதனால் இராணுவ கெடுபிடிக்குள், திறந்த வெளிச் சிறைச்சாலைக்குள் தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலைதான் உள்ளது.

யுத்தமில்லாத நாட்டில் ஏன் இவ்வளவு படையினர்? இவர்களுக்கான சம்பளத்திற்காக பெருமளவு பணம் ஒதுக்கப்படுகின்றது. வடக்கு மற்றும் கிழக்கில் படையினரை குவித்து நீங்கள் திறந்த வெளிச் சிறைக்குள் தமிழர்களை அடைத்து வைத்துள்ள நிலையில் படையினர் இங்கு தோட்டங்கள் செய்கின்றனர். இவர்களின் உற்பத்திகள் யாழ்ப்பாணத்து சந்தைகளில் விற்பனைக்கு வருகின்றன.

அதுமட்டுமல்ல இங்கு படையினர் சலூன்களும் நடத்துகின்றனர். உலகில் சகல நாடுகளும் படையினரை வைத்துள்ளன. அங்கு படையினருக்கான சிகை அலங்காரத்துக்காக சலூன்கள் வைத்திருப்பார்களே தவிர மக்களிடம் பணம் அறவிட்டு படையினரைக் கொண்டு சலூன்கள் நடத்தும் ஒரே நாடு இலங்கைதான். அதுமட்டுமல்ல உணவகங்களையும் நடத்துகின்றனர்.

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றும்போது, நாங்கள் உள்நாட்டு பொறிமுறையை பின்பற்றி தீர்வை காண்கின்றோம் எனக் கூறினார். இது கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக இந்த நாட்டில் மாறி மாறி வருகின்ற அரசாங்கங்கள் சொல்லுகின்ற விடயம்.

2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அப்போதிருந்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும் நாங்கள் எல்லாவறையும் ஏற்றுக் கொண்டு தீர்வை எட்டுகின்றோம் எனக்கூறினார். நீங்கள் அப்போது இதனை ஏற்க மாட்டோம் என்றீர்கள். இப்போது உள்ளக பொறிமுறையில் தீர்வு என்கின்றீர்கள். இந்த நாட்டில் தமிழர்களுக்கு நடந்த அநீதிக்கு நீதி கிடைக்காமல் உள்ளது. நீதி தடுக்கப்படுகின்றது.

பாதுகாப்பு அமைச்சுக்காக 2023 ஆம் ஆண்டு 375 பில்லியன் ஒதுக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு 425 பில்லியன் ஒதுக்கப்பட்டது. தற்போது 2025 ஆம் ஆண்டுக்கு 437 பில்லியன் ஒது க்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு படிப்படியாக கூடிக்கொண்டே செல்கின்றது.

யுத்தம் இல்லாத நாட்டில் படைகளுக்கு ஏன் இவ்வளவு நிதி? சமூக அபிவிருத்திக்கு ஒதுக்கப்படும் நிதி ஒவ்வொரு ஆண்டும் குறைந்து செல்கையில் படையினருக்கான நிதி அதிகரித்து செல்கின்றது. 

நாட்டில் புரையோடிப்போயுள்ள பிரச்சினையை தீர்க்காமல் படையினருக்கு அதிக நிதிகளை ஒதுக்கிக்கொண்டிருந்தால் இந்த நாட்டின் சரிந்த பொருளாதாரத்தை எவ்வாறு நிமிர்த்தப்போகின்றீர்கள்? மூலதனத்திற்கான ஒதுக்கீடு மிக மிகக்குறைவு. இந்த நிலைமை மாற வேண்டுமானால் முதலில் உங்களின் மன நிலை மாறவேண்டும்.

யாழ்ப்பாணத்தில் வலி வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 13 கிராம அலுவலகர் பிரிவுகளில் கிட்டத்தட்ட 2700 ஏக்கர் காணிகள் இப்போதும் படையினர் வசம் உள்ளன. உயர்பாதுகாப்பு வலயம் என்ற சொல்லுக்குள் அடக்கப்பட்டு அந்த இடங்களில் இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. மக்கள் இப்போது அகதிகளாக இருக்கின்றார்கள். இந்த மக்களின் காணிகளை ஏன் இன்னும் விட முடியவில்லை? 

பலாலி விமான நிலையத்திற்காக சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கான நஷ்ட ஈடுகள் இன்னும் வழங்கப்படவில்லை. இவ்வாறான நிலையில் மேலும் காணிகளை சுவீகரிக்கப்போவதாக செய்திகள் வெளிவருகின்றன.

தயவு செய்து ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். ஒருபகுதி மக்கள் கண்ணீரோடு வாழ்கின்றார்கள். அந்தமக்களுக்கு நீதி வழங்காது தொடர்ந்தும் படைகளுக்கு அதிக நிதிகளை ஒதுக்குவதென்பது நீதியாக அமையாது. 

கிளிநொச்சி நகரப் பகுதியில் 39 வீத நிலப்பகுதி தற்போதும் இராணுவ வசம் உள்ளது. இலங்கையில் எங்கேயாவது மாவட்ட அரச செயலகத்திற்குள் இராணுவ முகாம் உள்ளதா? கிளிநொச்சி மாவட்ட செயகத்திற்குள் இருக்கின்ற 2 ஏக்கர் காணியை இராணுவம் பலாத்காரமாக பறித்தெடுத்து இராணுவ முகாம் அமைத்துள்ளது. நகரப்பகுதியில் இராணுவம் குடியிருக்கின்றது. மக்களுக்கான காணிகள் இன்னும் வழங்கப்படவில்லை. அரச காணிகள் அரச நிறுவனங்களுக்கு வழங்கப்படவில்லை.

எனவே இவ்வாறான படை ஆக்கிரமிப்புக்களிலிருந்து மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். நிலங்கள் விடுவிக்கப்பட வேண்டும். அவ்வாறில்லாது இந்த நிலை தொடருமானால் அது நாட்டை மிகவும் ஆபத்தான நிலைக்கு கொண்டு செல்லும். மக்கள் தமது ஜனநாயக உரிமையைக்கூட பயன்படுத்த முடியாதவகையில் பாதுகாப்பு கிடுக்குப் பிடிக்குள் வைக்கப்பட்டுளார்கள். போராட்டங்களில் ஈடுபடுவோர் விசாரணைகளுக்கு அழைக்கப்படுகின்றனர் என தெரிவித்துள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget