ஏசியிலிருந்து வரும் காற்று வெயில் வெப்பத்தைப் போக்கி நிம்மதியான உறக்கத்தை அளித்தாலும், ஆபத்தும் நிறைந்திருக்கிறது. நம்மை அறியாமலேயே அந்த ஆபத்துகளை விலை கொடுத்து வாங்கிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அவை ஏசியால்தான் ஏற்படுகின்றன என்பது உங்களுக்கே தெரியாது.
உடலின் ஈரப்பதத்தைக் குறைத்துவிடும். ஏசியால் குளிரூட்டப்பட்ட அறையில் ஏசியானது மொத்த ஈரப்பதத்தையும் உறிஞ்சிவிடும். பின் அந்த அறையை குளுமையாகவும், வறட்சியாகவும் மாற்றிவிடும். நீங்களும் குளிர்ந்த காற்று நிறைந்த அறையில் அமரும்போது அதிகமாக தண்ணீர் தாகம் ஏற்படாது என்று நினைப்பீர்கள். ஆனால் உண்மை அதற்கு முரணானது. இதனால் உடலுக்குத் தேவையான நீரும் வற்றி நாட்கள் செல்லச்செல்ல பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்.
அறையின் ஈரப்பதம் முழுவதையும் ஏசி உறிஞ்சிவிடுவதால், சருமத்திற்கும் இயற்கையான ஈரப்பதம் கிடைக்காது. அதேபோல் உடல் நீரும் வற்றிவிடும். சருமம் சுவாசம் பெறவும் வழியில்லை. வறண்ட குளிர்காற்று, சரும ஈரத்தையும் உறிஞ்சிவிடுவதால் பொலிவிழந்த வறண்ட சருமத்தை மட்டுமே பெறுவோம். வறட்சியால் சருமத்தில் சுருக்கம், வயதான சரும தோற்றத்தையும் விரைவில் பெற்றுவிடுவோம்.
ஏசியில் பணியாற்றும் பெண்கள், தங்கள் சருமத்திற்கு ஏற்ற மாய்ஸ்ரைசர்கள் பயன்படுத்துவது அவசியம். ஒரு நாளைக்குக் குறைந்து 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
அதிகமான தண்ணீர் குடித்து உடலை நீர்த்தன்மையுடன் வைத்திருந்தால், சரும வறட்சி, நீங்கிப் பாதிப்பு ஏற்படுத்துவதில் இருந்து தப்பிக்கலாம்.
உங்கள் சருமத்துக்கு ஏற்ற திரவத்தன்மையுடன் கூடிய லோஷன்களை 2 மணி நேரத்துக்கு ஒருமுறையோ, அல்லது சருமம் உலர்வாகத் தோன்றும் சமயத்திலோ எடுத்து போட்டுக் கொள்ளுங்கள்.
ஏசி பயன்பாட்டில் அதிக நேரம் இருப்பவர்கள், ஒரு நாளைக்கு 6 முறையாவது முகத்தைக் குளிர்ந்த நீரால் கழுவுங்கள்.
வாட்டர் ஸ்ப்ரே பாட்டிலில் ரோஸ் வாட்டரை நிரப்பி மூன்று மணி நேரத்துக்கு ஒருமுறை முகத்தில் ஸ்ப்ரே செய்துகொண்டால், முகத்தின் ஈரப்பதம் குறையாமல் இருக்கும் அல்லது ஆல்ஹாகல் சேர்க்காத ஈரத்தன்மையுடன் கூடிய வைப்ஸ் மூலம் அவ்வப்போது முகத்தில் லேசாகத் துடைத்துக்கொண்டால் புத்துணர்வுடன் வைத்திருக்க முடியும்.
குளிக்கும்போது சில சொட்டு தேங்காய் எண்ணெய்யை நீரில் சேர்த்து குளிக்கலாம். இது சருமத்தில் எண்ணெய்ப் பசை இருக்க உதவும். அதேபோல குளிப்பதற்கு முன்பு தயிரை உடம்பில் தடவி மிதமான வெந்நீரில் குளித்துவந்தால் வறண்ட சருமம் சரியாகிவிடும்.
நல்லெண்ணெய், தேங்காயெண்ணெய், ஆலிவ் எண்ணெய் மூன்றையும் சம அளவு எடுத்துக் காய்ச்சி வைத்துக்கொள்ளுங்கள். தினமும் குளிக்கும்போது, இந்த எண்ணெய்யை உடலில் தடவிக்கொள்ளுங்கள்.
Post a Comment