நேற்று நுவரெலியாவில் இடம்பெற்ற பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்றங்கள் தவறாகப் பயன்படுத்துவதற்கும், கொள்ளையடிக்கப்படுவதற்கும் நிதி ஒதுக்கப்படாது என்பதையே தான் கூறியதாக அவர் தெளிவுபடுத்தினார்.
உள்ளூராட்சி மன்ற கொள்கையைப் பின்பற்றாமல் நிதியை தவறாகப் பயன்படுத்தி கொள்ளையடிப்பதை அனுமதிக்க முடியாது என்றே நான் கூறினேன் என்று பலரதும் கவலைகளுக்கு ஜனாதிபதி விளக்கமளித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தி வெற்றி பெறாத உள்ளூராட்சி மன்றங்களுக்கு நிதி ஒதுக்கப்படாது என்று தான் கூறியதாகக் கூறப்படும் கூற்றுகள் தொடர்பில் இவ்வாறு தனது மேலதிக விளக்கத்தை தெரிவித்துள்ளார்.
தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்திய ஜனாதிபதி, மத்திய அரசால் கவனமாக சேகரிக்கப்படும் நிதி ஊழல் நிறைந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கு ஒதுக்கப்படாது என்று மட்டுமே கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு வருவாய்த் துறையுடனான தினசரி சந்திப்புகள் மற்றும் சுங்கத் துறையை நெருக்கமாகக் கண்காணித்தல் மூலம், தற்போது திறைசேரியின் வசம் உள்ள பணத்தை நாங்கள் சேகரித்துள்ளோம். கவனமாக சேகரிக்கப்பட்ட அந்தப் பணத்தை ஊழல் நிறைந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கு ஒப்படைக்க முடியாது.
நுவரெலியா மாநகர சபைக்குள் ஒரு குழு ஊழல் நிறைந்ததாக இருந்தால், இந்த நிதியை நாம் ஏன் அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்? என்று அவர் கேட்டுள்ளார்.
மத்திய அரசு பொது நிதியை துஷ்பிரயோகம் செய்வதைத் தவிர்ப்பது போல, உள்ளூராட்சி மன்றங்களும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று ஜனாதிபதி வலியுறுத்தினார்.
மத்திய அரசு திருடாமல், உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்ந்து திருடும்போது என்ன நடக்கும்? மத்திய அரசு வீண்விரயத்தைத் தவிர்க்கும் அதே வேளையில், பிரதேச சபைகள் பணத்தை வீணாக்குகின்றன. மத்திய அரசு தனது கடமைகளைச் செய்கிறது, ஆனால் உள்ளூராட்சி மன்றங்கள் மக்களைக் காட்டிக் கொடுக்கின்றன. மக்களின் பணத்தை நாம் ஏன் தெரிந்தே அத்தகைய நிறுவனங்களுக்கு ஒப்படைக்க வேண்டும்? என்று அவர் கேள்வி எழுப்பினார்.
மத்திய அரசால் கவனமாக சேகரிக்கப்பட்ட நிதி, மக்களின் பணம். பிரதேச சபைகளுக்கோ அல்லது நகர சபைகளுக்கோ தவறாகப் பயன்படுத்தப்படுவதற்காக ஒப்படைக்கப்படாது என்பதையே தான் தெரிவித்ததாக ஜனாதிபதி திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment