Ads (728x90)

வடக்கு மற்றும் கிழக்கில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அகற்றுவது என்பது பௌதீக ஆபத்துகளை அகற்றுவது மட்டுமல்ல, மக்களின் கண்ணியம், வாழ்வாதாரம் மற்றும் அமைதியான வாழ்க்கை நிலைமைகளை மீட்டெடுப்பதற்கான ஒரு தேசிய தேவையாகும் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

காலி முகத்திடல் ஹோட்டலில் நேற்று முன்தினம் நகர அபிவிருத்தி, நிர்மாணத் துறை மற்றும் வீடமைப்பு அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கை திட்டத்தின் நன்கொடையாளர் ஒருங்கிணைப்பு மற்றும் பாராட்டு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இதனைத் தெரிவித்தார்.

மோதல்களுக்குப் பின்னர் எழுந்த ஒரு தேவையாக இருந்தாலும், கண்ணிவெடி அகற்றல் என்பது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விடயமாகும். இந்த செயன்முறை பௌதீக ஆபத்துகளை அகற்றுவது மட்டுமல்ல, மக்களின் கண்ணியம், வாழ்வாதாரம் மற்றும் அமைதியான எதிர்காலத்திற்கான வாக்குறுதியை மீட்டெடுப்பது பற்றியதுமாகும்.

பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படுவது, பிள்ளைகள் பாதுகாப்பாக விளையாடுவது, விவசாயிகள் தங்கள் நிலங்களுக்கு அச்சமின்றித் திரும்புவது, மக்களின் வாழ்க்கை நிலைமைகளை மீண்டும் கட்டியெழுப்புவது போன்ற விடயங்களுக்கு கண்ணிவெடிகளை அகற்றுவது மிகவும் முக்கியம்.

அரசாங்கத்தின் அபிவிருத்தி தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

வடக்கு மற்றும் கிழக்கில் சுமார் 23 சதுர கிலோமீட்டர் நிலம் இன்னும் கண்ணிவெடிகள் காரணமாக பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. எனவே கண்ணிவெடிகள் உள்ள பகுதிகளை பொதுமக்கள் விரைவில் பயன்படுத்தக்கூடியதாக மாற்ற வேண்டும். 2028 ஜூன் 1ஆந் திகதிக்கு முன்னர் கண்ணிவெடிகளை அகற்றுவதற்கான ஒப்பந்தத்தின் பிரிவு 5 இன் கீழ் உள்ள கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது.

ஒவ்வொரு கண்ணிவெடியையும் அகற்றுவது மக்களின் நன்மைக்கும் நாட்டின் எதிர்காலத்திற்கும் மிகவும் முக்கியமானது என்றும், எனவே, சர்வதேச சமூகத்திடமிருந்து தொடர்ந்து ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.


Next
This is the most recent post.
Previous
Older Post

Post a Comment

Recent News

Recent Posts Widget