Ads (728x90)

2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் உயர் திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் கிளிநொச்சி-இரணைமடு நெலும் பியசவில் நேற்று நடைபெற்றது. 

க.பொ.த.உயர்தரப் பரீட்சையில் ஒவ்வொரு பாடப்பிரிவிலும் ஒரு மாவட்டத்தில் சிறந்த பெபேறுகளைப் பெற்ற 60 மாணவர்கள் வீதம் தெரிவு செய்யப்பட்டு, இத்திட்டத்தின் கீழ் நிதிப் புலமைப்பரிசில்களும், சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன. இதனடிப்படையில் வடக்கு மாகாணத்தில் 287 மாணவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டன. 

ஜனாதிபதியின் செயலாளர் தனது வரவேற்புரையில், ஜனாதிபதி நிதியத்தின் நிதி கடந்த காலத்தில் தவறான வகையில் பயன்படுத்தப்பட்டதாகவும் அது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், தாம் இதைச் சரியான வகையில் செயற்படுத்த எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். 

சபாநாயகர் அவர்கள் தனது உரையில், ஜனாதிபதி நிதியத்தின் ஊடான சேவைகள் வழங்கலில் கடந்த காலங்களில் பாரபட்சம் இருந்தது. அத்துடன் மக்கள் கொழும்பை நோக்கி வரவேண்டியிருந்தது. அது மாற்றி அமைக்கப்பட்டிருக்கின்றது. ஜனாதிபதி நிதியத்திலிருந்து மருத்துவத் தேவைக்காக மாத்திரமல்ல கல்வி உள்ளிட்ட ஏனையவற்றுக்கும் பிரதேச செயலகங்கள் ஊடாக விண்ணப்பித்து அதனைப் பெற்றுக்கொள்ள முடியும். 

அண்மையில் நுவரெலியாவில் நடைபெற்ற மிகப்பெரிய பேருந்து விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கும் ஜனாதிபதி நிதியத்திலிருந்தே உதவி வழங்கப்பட்டது. வடக்கு மாகாணத்தில் மாணவர்களுக்காக 30 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணவர்களின் கல்வியை மேம்படுத்தும் நோக்கில் எதிர்காலத்தில் 150 மில்லியன் ரூபாவை ஒதுக்கவும் தீர்மானித்திருக்கின்றோம் எனவும் தெரிவித்தார்.

ஜனாதிபதி நிதியத்தால் கடந்த காலங்களில் நன்மையடைந்தவர்கள் பெரும் புள்ளிகள் எனவும், அதனை மாற்றியமைக்க தமது அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் இ.சந்திரசேகரன் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, கடற்றொழில், நீரியல்வளத்துறை அமைச்சர் இ.சந்திரசேகரன், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.சிறீபவானந்தராஜா, க.இளங்குமரன், ம.ஜெகதீஸ்வரன், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், மாவட்டச் செயலர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.


Post a Comment

Recent News

Recent Posts Widget