Ads (728x90)

கொழும்பில் நடைபெற்ற ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) ஏற்பாடு செய்த ”பொருளாதார மாற்றத்திற்கான புத்தாக்கம்” நிகழ்வு நேற்று கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்றது.

”பொருளாதார மாற்றத்திற்கான புத்தாக்கம்” என்ற "செரண்டிபிட்டி அறிவுத் திட்டம்" (SKOP) என்பது இலங்கைக்குரிய பிரச்சினைகள் பற்றிய அறிவைப் பகிர்ந்து கொள்வதற்கும், தேசிய புத்தாக்கச் சூழலை வலுப்படுத்துவதற்கும், அரசாங்கம், சர்வதேச நிபுணர்கள் மற்றும் பிற பங்குதாரர்களிடையே நீண்ட கால ஈடுபாட்டை ஊக்குவிப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ADB இன் அறிவுத் திட்டமாகும். 

”பொருளாதார மாற்றத்திற்கான புத்தாக்கம்” என்ற செரண்டிபிட்டி அறிவுத் திட்டத்தில் தொடக்க உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, பொருளாதார நெருக்கடி மற்றும் நடுத்தர வருமானப் பொறியிலிருந்து மீண்டெழுவதற்கு புத்தாக்கத்தின் தேவையை வலியுறுத்தினார். மேலும், தனியார் துறையுடன் திறம்பட ஒன்றிணைந்து கொள்கைகளை வகுப்பதிலும், புத்தாக்கச் சங்கிலி முழுவதிலும் தீவிர ஈடுபாட்டின் மூலம் புத்தாக்கத்தை ஊக்குவிப்பதிலும் அரசு அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது எனவும் குறிப்பிட்டார்.

இலங்கை புத்தாக்கத்திற்கு வலுவான அடித்தளத்தைக் கொண்டிருந்த போதிலும், ஒருங்கிணைப்பு இல்லாமையின் காரணமாக உலகளாவிய புத்தாக்கக் குறியீடு 2024 இல் 113 நாடுகளில் 89வது இடத்தில் இலங்கை தரவரிசை படுத்தப்பட்டுள்ளது என பிரதமர் கூறினார். பல தசாப்தங்களாக, உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கு குறைவான கவனமே செலுத்தப்பட்டுள்ளது. 

இந்த நிலையை மாற்றுவதற்கு எமது அரசு அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது. இருப்பினும் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி ஆகியவற்றுக்கான நிதியுதவியை அதிகரிக்க இருக்கின்றோம். அத்தோடு உயர்கல்வியில் மூலோபாய முதலீட்டையும் மேற்கொள்ளவிருக்கின்றோம் எனவும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கை வதிவிடப் பணியகத்தின் நாட்டுப் பணிப்பாளர் தகபுமி கடோனோ, பிரதமரின் செயலாளர் ஜீ. பிரதீப் சபுதந்த்ரி, உயர் கல்வி, கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி அமைச்சின் செயலாளர் நாளக்க கலுவெவ, உத்தியோகத்தர்கள் மற்றும் இலங்கையின் பல்கலைக்கழகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பீட உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget