அழகான மற்றும் தூய்மையான கடற்கரையை உருவாக்குதல் மற்றும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் பொழுதுபோக்கு வசதிகளை மேம்படுத்தும் நோக்குடன் 14 மாவட்டங்களில் சுமார் 43 கடலோர பிரதேசங்கள் தூய்மையான இலங்கை (Clean Sri Lanka) எண்ணக்கருவுடன் இணையும் வகையில் கடற்கரை பொழுதுபோக்கு பூங்காக்களாக அபிவிருத்தி செய்யப்பட உள்ளன.
இதன்படி யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள புங்குடுதீவு, வேலணை கடற்கரை பூங்காவின் அபிவிருத்திப் பணிகள் நேற்று முன்தினம் “இதயபூர்வமாக யாழ்ப்பாணத்திற்கு” திட்டத்துடன் இணைந்து ரூபா 2.6 மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் கீழ் ஆரம்பிக்கப்பட்டன.
இப்பூங்காக்களில் 20 மீட்டர் அகலம், 100 மீட்டர் நீள நடைபாதை உருவாக்கப்பட இருப்பதோடு, ஒரு வாகன தரப்பிடம் மற்றும் 26 இருக்கைகள் அங்கு அமைக்கப்படும். மரங்களை நட்டு பூங்காவை உருவாக்கும் பணியும் இதற்கு இணையாக ஆரம்பிக்கப்பட்டது.
இந்தத் திட்டத்துடன் இணைந்ததாக வட மாகாணத்தில் மேலும் 05 கடற்கரை பிரதேசங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். கடலோரப் பாதுகாப்பு மற்றும் கடலோர வளங்கள் முகாமைத்துவத் திணைக்களம், சுற்றாடல் அமைச்சு மற்றும் நகர அபிவிருத்தி அதிகாரசபை, உள்ளூராட்சி சபைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் போன்ற ஏனைய நிறுவனங்களின் தொழில்நுட்ப உதவியுடன் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
அபிவிருத்திப் பணிகள் நிறைவடைந்த பிறகு, சிறிய வர்த்தகர்கள், அண்மையிலுள்ள சுற்றுலா நிறுவனங்கள், சமூக அடிப்படையிலான அமைப்புகள், ஆர்வமுள்ள தனியார் நிறுவனங்கள் போன்றவற்றின் பங்களிப்புடன் அபிவிருத்தி செய்யப்பட்ட இடங்கள் பராமரிக்கப்படும் அல்லது சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி நிறுவனங்களிடம் கையளிக்கப்படும்.

Post a Comment