Ads (728x90)

ரணில் விக்கிரமசிங்கவின் பிணை கோரிக்கை நிராகரிக்கப்பட்டமை தவறென்று சொல்பவர்கள் நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைக்கலாம். நாமல் ராஜபக்ஷ, தயாசிறி ஜயசேகர, நிமல் சிறிபாலடி சில்வா ஆகியோர் தானும் சட்டத்தரணி தான் என்று குறிப்பிட்டுக் கொண்டு நீதிமன்றத்தின் முன்பாக ஊடகங்களுக்கு குறிப்பிடும் விடயங்களை நீதிமன்றத்துக்குள் முன்வைக்கலாம்.

ரணில் விக்கிரமசிங்க தொடர்பில் மேலதிக தகவல்கள் தேவையாயின் இன்று அவருக்கு ஆதரவாக ஒன்றிணைந்துள்ளவர்கள் கடந்த காலங்களில் ரணில் விக்கிரமசிங்க தொடர்பில் குறிப்பிட்ட விடயங்களை மீண்டும் கேட்கலாம். சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளை மக்கள் இனியேனும் விளங்கிக்கொள்ள வேண்டும் என சுகாதாரம் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

166 இலட்சம் அரச நிதியை சாதாரண நபர் ஒருவர் முறைகேடாக பயன்படுத்தியிருந்தால் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படமாட்டாதா? 

குற்றப்புலனாய்வு திணைக்களம் கடந்த காலங்களில் மேற்கொண்ட விசாரணைகளுக்கு அமைவாக நீதிமன்றத்துக்கு விடயங்கள் அறிக்கையிடப்பட்டன. நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைவாகவே கைதுகள் இடம்பெறுகின்றன. இவ்வாறே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நீதிமன்ற உத்தரவுக்கமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவை விளக்கமறியலில் வைத்துள்ளமை தவறென்று குறிப்பிடுபவர்கள் நீதிமன்றத்தில் தவறு என்பதற்கான விடயங்களை எடுத்துரைக்கலாம். அதனை விடுத்து ஊடகங்களில் குறிப்பிடுவதால் பலனேதுமில்லை.

எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்துள்ளன. இவர்களின் அச்சம் நியாயமானதே. அரச நிதி மோசடி,ஊழல், கொலை, கொள்ளை, கப்பம், சட்டவிரோத செயல்களுடன் தாம் எந்தளவுக்கு தொடர்புப்பட்டுள்ளோம் என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள். விசாரணையாளர்கள் சொற்ப விடயங்களையே அறிவார்கள்.

அதிகாரத்தின் முன்பாக சட்டம் தலைகுனியாது என்பதை மக்கள் தற்போது விளங்கிக்கொண்டுள்ளார்கள். நீதிமன்றத்தின் மீதான மக்களின் நம்பிக்கை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது வலுவாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget