மேல்முறையீட்டு நீதிமன்ற பதிவாளர் சம்பந்தப்பட்ட சட்டத்தரணிக்கு எதிராக தாக்கல் செய்த முறைப்பாட்டை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் குமுதுனி விக்ரமசிங்க மற்றும் அச்சலா வெங்கப்புலி ஆகியோரின் ஒப்புதலுடன் பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன இந்த தீர்ப்பை அறிவித்தார்.
மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் ஆவணக் காப்பகத்திற்கு சென்று ஒரு வழக்குக் கோப்பைப் பெற்று, அதிலிருந்து இரண்டு பக்கங்களை சட்டவிரோதமாக கிழித்ததாகக் பிரதிவாதியான சட்டத்தரணி மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் பதிவாளர் டபிள்யூ.எஸ்.பி.எஸ். பெர்னாண்டோ இது குறித்து மருதானை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார். மேலும் சம்பந்தப்பட்ட சட்டத்தரணி மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 2023 ஜனவரி 25 ஆம் திகதியன்று தலா 500,000 ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டார் என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்வைக்கப்பட்ட அனைத்து சமர்ப்பணங்களையும் பரிசீலித்த பின்னர் நீதித்துறைச் சட்டத்தின் பிரிவு 42 இன் படி, பிரதிவாதி சட்டத்தரணி உடனடியாக சட்டப் பணியிலிருந்து நீக்க உத்தரவிடப்படுவதாக பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன தனது தீர்ப்பில் தெரிவித்தார்.
இந்த உத்தரவுக்கு அமைவாக செயற்பட்டு தேவையான மேலதிக நடவடிக்கைகளை எடுக்குமாறு மூன்று நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு பதிவாளருக்கு உத்தரவிட்டது.

Post a Comment