Ads (728x90)

சமூக வலைதளத் தடைக்கு எதிராக இளைஞர்கள் முன்னெடுத்து வரும் தொடர்ச்சியான போராட்டம் தீவிரமடைந்த நிலையில் நேற்றைய தினம் உள்துறை அமைச்சர் ரமேஷ் லேகாக் ராஜினாமா செய்தார். இதன் விளைவாக இன்று பிரதமர் சர்மா ஒலிவும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

சமூக வலைதள தடை, ஊழல், சித்திரவதை, பாரபட்சம் ஆகியவற்றுக்கு எதிராக இளைஞர்கள் தலைமையில் தொடங்கிய இந்த போராட்டங்கள் வன்முறையாக மாறியதை தொடர்ந்து 19 பேர் கொல்லப்பட்டதோடு, 400 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

26 சமூக வலைத்தளங்களுக்கு அந்த நாட்டில் தடை விதிக்கப்பட்டதை அடுத்து இளைஞர்கள் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். ஜெனரல்-இசட் நடத்திய சமூக ஊடக ஆதரவு போராட்டம் ஊழல் எதிர்ப்புப் போராட்டமாக மாறியது. 

இந்த சூழலில் பிரதமர் கே.பி. சர்மா ஒலி சமூக ஊடகங்கள் மீதான தடையை திரும்பப் பெற்ற நிலையில், பரவலான ஊழல் காரணமாக போராட்டக்காரர்கள் அவரது இராஜினாமாவை வலியுறுத்தி வந்தனர். 

குறிப்பாக பல்வேறு அமைச்சர்களின் மகன்கள் மற்றும் மகள்களின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் நேபாளத்தில் சமூக ஊடகங்களில் வைரலாகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. 

அங்கு அமைச்சர்களின் குடும்பங்கள் ஆடம்பர வாழ்க்கையை அனுபவிக்கும் அதேவேளையில், சாதாரண நேபாள குடிமக்கள் தங்கள் வாழ்க்கையை நடத்தக்கூட போராடுகிறார்கள் என இளைஞர்கள் கூறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

போராட்டக்காரர்கள் அமைச்சர்கள், அதிபர், முன்னாள் பிரதமர்கள் ஆகியோரின் தனிப்பட்ட வீடுகளையும் தாக்கி, தீ வைத்துள்ளனர்.

நேபாளம் தலைநகர் காத்மாண்டு பள்ளத்தாக்கு முழுவதும் அதிகரித்து வரும் போராட்டங்களைத் தொடர்ந்து திரிபுவன் சர்வதேச விமான நிலையம் முழுமையாக மூடப்பட்டுள்ளது.

கோதத்தார் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து ஏற்பட்ட தீ விபத்துகள், மோசமடைந்து வரும் விமானப் பாதுகாப்பு நிலைமைகள் காரணமாக மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக திரிபுவன் சர்வதேச விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


Post a Comment

Recent News

Recent Posts Widget