மின்சக்தி சுயாதீனத்துவம் நாட்டின் வளர்ச்சிக்காக அத்தியாவசியமானது. மின்கட்டணத்தை குறைப்பதற்கு முன்னர் அதற்குரிய நிலையான மற்றும் சாத்தியமான திட்டங்களை செயற்படுத்த வேண்டும். அதற்குரிய நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளோம் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
இலங்கை மின்சார சபையின் நீண்டகால மின் உற்பத்தி திட்டத்தில் பிரதானமானதாக விளங்கும் சோபாதனவி மின்நிலையம், தற்போதைய மின்சாரத் தேவையின் 12 சதவீத பங்கைக் பூர்த்தி செய்யக் கூடியதாகும்.
இது இலங்கையின் மிகப்பெரியதும் மிகச் செயல்திறனும் கொண்ட கூட்டு சுழற்சி மின் நிலையமாகும். இந்த மின் நிலையம் அடுத்த 20 ஆண்டுகளுக்கான நாட்டின் மின்சாரத் தேவையை பூர்த்தி செய்யக்கூடியதாகும். இந்தத் திட்டம் இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்பட்டது.
முதல் கட்டமானது 220 மெகாவாட் திறன் கொண்ட திறந்த சுழற்சி செயல்பாடு. இரண்டாம் கட்டமானது, நீராவி டர்பைன் ஒன்றை நிறுவுவதன் மூலம் மேலும் 130 மெகாவாட் திறனைச் சேர்த்து. மொத்த திறன் 350 மெகாவாட்டாக காணப்படுகிறது.
மின்சக்தித் துறையில் இடையறாத முறையில் மாறிக்கொண்டிருக்கும் நுகர்வோர் தேவைகள் மற்றும் கட்டுப்பாட்டு வடிவமைப்புகளுடன் ஒத்திசைவாக, நிலைத்தன்மை மற்றும் புதுமையை முன்னிறுத்திய மாற்றத்திற்குரிய ஒரு யுகத்தை உலகம் தற்போது கடந்து வருகிறது.
அதன்படி உலகளாவிய போக்குகள் இவ்வாறு அமையும்போது, எங்கள் பிராந்தியத்தின் மின் கட்டணம் அதிகரித்த நாடுகளுக்குள் இலங்கை உயர் இடத்தில் இருப்பதைச் சொல்ல வேண்டும்.
நமது நாட்டில் பல தசாப்தங்களாக செயல்பட்ட தவறான பொருளாதார கொள்கையின் காரணமாக, இப்போது நாடு பின்தங்கிய பொருளாதார பள்ளத்தாக்கிலிருந்து மீண்டு உற்பத்தி அடிப்படையிலான பொருளாதாரத்துக்குள் செல்வதற்கான முக்கிய தடையாக தாங்க முடியாத மின்சாரச் செலவினை குறிப்பிடலாம். இதனை கருத்தில் கொண்டு நாங்கள் மீள்சுழற்சி ஆற்றலுக்கு எங்கள் கவனத்தை திருப்பியுள்ளோம் என்றார்.

Post a Comment