Ads (728x90)

நாட்டில் தடையற்ற மின்விநியோகத்தை உறுதிப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும். இதனால் தான் மின்சார சேவை அத்தியாவசிய சேவையாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதனை குழப்ப முயற்சிப்பவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

உத்தேச மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்படாவிட்டால் மின்சக்தி துறை வீழ்ச்சியை தடுக்க முடியாது. எனவே மறுசீரமைப்பை மேற்கொள்ள வேண்டியது அத்தியாவசியமாகும்.

மின்சாரசபை ஊழியர்களை 50 சதவீதத்தால் குறைத்து அதனை முழுமையாக தனியார் மயப்படுத்துவதே கடந்த அரசாங்கத்தின் நோக்கமாகவிருந்தது. ஆனால் நாம் அதனை நான்கு பிரதான அரச நிறுவனங்களாக்கி நவீனமயப்படுத்தவே நடவடிக்கை எடுத்துள்ளோம்.

சட்ட ரீதியாகவே இந்த நிறுவனங்கள் நிறுவப்படவுள்ளன. இதன்போது எந்தவொரு ஊழியர்களையும் சேவையிலிருந்து நீக்குவதற்கு தீர்மானிக்கவில்லை. ஆனால் இவற்றுடன் இணைந்து செயற்பட முடியாது என எண்ணுபவர்கள் நாம் ஏற்கனவே அறிவித்துள்ளமைக்கமைய நஷ்டஈட்டைப் பெற்றுக் கொண்டு சுய விருப்பின் பேரில் சேவையிலிருந்து விலகிக் கொள்ள முடியும்.

பொருளாதாரத்தை மீண்டும் வீழ்ச்சியடைச் செய்வதற்கு இடமளிக்க நாம் தயாராக இல்லை. எந்தவொரு நாசவேலையையும் அரசாங்கம் அனுமதிக்காது. அப்படி ஏதாவது நடந்தால் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படுவதை நாங்கள் உறுதி செய்வோம் என்று அவர் எச்சரித்தார்.


 

Post a Comment

Recent News

Recent Posts Widget