Ads (728x90)

எதிர்காலத்தில் அரசியலை வலுப்படுத்திக் கொள்வதற்காகவும், சட்டத்திலிருந்து தப்பிக்கவுமே எதிர்க்கட்சிகள் தற்போது ஒன்றிணைந்துள்ளன என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அபிவிருத்தித் துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அம்பாறையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் திருடர்கள், ஊழல்வாதிகள் என்று ஒருவரை ஒருவர் தூற்றிக் கொண்டவர்களே இன்று ஒரே மேடையில் ஒன்றிணைந்துள்ளனர். அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக நாம் ஒருவரை ஒருவர் திருடர் என்று விமர்சித்துக் கொண்டோம் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் குறிப்பிட்டுள்ளார். 

இதனை மக்கள் கூர்ந்து அவதானிக்க வேண்டும். கடந்த ஜனாதிபதி தேர்தல், பொதுத்தேர்தல் ஆகியவற்றில் தோல்வியடைந்தவர்கள், திருடர்கள் அனைவரும் ஒரு பக்கமாக ஒன்றிணைந்துள்ளனர். ஆனால் நாட்டு மக்கள் தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்தின் பக்கம் ஒன்றிணைந்துள்ளனர்.

மக்களின் பிரச்சினைகளுக்காகவா எதிர்க்கட்சியினர் ஒன்றிணைந்துள்ளனர். இல்லை, சட்டத்தில் இருந்து எவ்வாறு பாதுகாப்புப் பெறுவது, எதிர்காலத்தில் அரசியலை எவ்வாறு வலுப்படுத்திக்கொள்வது என்பதற்காகவே ஒன்றிணைந்துள்ளனர். 

எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைவுக்கு நாம் அச்சமடையப் போவதுமில்லை. காலத்தை வீணடிக்கப்போவதுமில்லை. ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாட்டில் ஒன்றிணைந்தவர்களிடமும் ஒருமித்த தன்மை இல்லை. குப்பை மேட்டை போன்றதாகவே எதிர்க்கட்சிகளின் தற்போதைய ஒன்றிணைவு காணப்படுகின்றது. 

எதிர்க்கட்சியினர் எதிர்காலத்திலேனும் தேர்தலில் வெற்றி பெற வேண்டுமாயின் மக்களாணையை விளங்கிக்கொள்ள வேண்டும். நாட்டு மக்கள் தேசிய மக்கள் சக்தியின் பக்கம் உள்ளனர். ஊழல்வாதிகளையும், நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளியவர்களையும் இனியும் மக்கள் ஆட்சிக்குக் கொண்டுவர போவதில்லை என்றார்.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget