Ads (728x90)

பல தசாப்தங்களாக ஆதிக்கம் செலுத்தி வந்த வன்முறை மற்றும் தண்டனையின்மை சுழற்சிகளிலிருந்து மீள்வதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்ப்பை இலங்கை தற்போது பெற்றுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவில் ஆரம்பமாகியுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான அறிக்கையை சமர்பித்து உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மாற்றத்தக்க சீர்திருத்தம், பொறுப்புக்கூறல், உண்மை மற்றும் நீதி ஆகியவற்றிற்காக நாடு முழுவதிலுமிருந்தும், அரசாங்கத்திற்கு தெளிவான ஆணை கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜெனீவாவில் இன்று பிற்பகல் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 60வது கூட்டத் தொடரின்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோல்கர் டர்க் இலங்கை குறித்த தமது அறிக்கையை முன்வைத்தார்.

இலங்கை குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், நீதி வழங்குவதற்கும், சட்டத்தின் ஆட்சியை மீட்டெடுப்பதற்கும், பாகுபாடு மற்றும் பிளவுபடுத்தும் அரசியலை ஒழிப்பதற்கும் இலங்கை அரசாங்கத்தின் உறுதிமொழிகள் இறுதியாகவும் உறுதியான முடிவுகளைத் தர வேண்டும் என்றும் ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோல்கர் டர்க் வலியுறுத்தினார். 

உள்நாட்டுப் போரின்போது நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களை தெளிவாக ஒப்புக்கொள்ளவும், அரசின் பொறுப்பையும், விடுதலைப் புலிகள் உள்ளிட்ட அரச சாரா ஆயுதக் குழுக்களின் பொறுப்பை அங்கீகரிக்கவும் அந்த அறிக்கை ஊடாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பான வழக்குகளை கையாள சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் அடிப்படையிலான, ஒரு சுயாதீனமான விசேட குழு மூலம் அர்ப்பணிப்புள்ள நீதித்துறை பொறிமுறையை நிறுவுமாறு இலங்கை அரசாங்கத்தை ஐ.நா மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வலியுறுத்தினார். 

வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவத்தால் கைப்பற்றப்பட்டுள்ள காணிகளை விடுவித்தல், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்து செய்தல் மற்றும் நீண்டகாலமாக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை விடுவித்தல் ஆகியவை அந்த பரிந்துரைகளில் அடங்குகின்றன. 

சர்வதேச மனித உரிமைகள் கடமைகளை நிறைவேற்ற விரிவான பாதுகாப்புத் துறை மறுசீரமைப்பு மற்றும் பரந்த அரசியலமைப்பு, சட்டம் மற்றும் நிறுவன மாற்றங்களையும் அறிக்கை பரிந்துரைத்துள்ளது. 

ஐ.நா மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் இலங்கைக்கு அண்மையில் விஜயம் செய்ததுடன், அதிகாரிகள், சிவில் சமூகம், அரசியல் கட்சிகள் மற்றும் மதத் தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடியதன் பின்னர் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது கூட்டத் தொடர் இன்று ஜெனீவாவில் ஆரம்பமான நிலையில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 8 ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment

Recent News

Recent Posts Widget