Ads (728x90)

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பொறுப்புக்கூறல் திட்டம் உட்பட சர்வதேச சமூகத்தால் விதிக்கப்படும் எந்தவொரு வெளிப்புற செயல்முறைகளையும் நிராகரிப்பதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடரில் இன்று உரையாற்றும்போது தெரிவித்துள்ளார்.

அத்துடன் உள்நாட்டு பொறிமுறைகள் மூலம் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலைப் பின்பற்றுவதற்கான தமது உறுதிமொழியை இலங்கை மீண்டும் வலியுறுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

நாடு முழுவதும் ஜனநாயகம், நீதி மற்றும் நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதில் "கணிசமான முன்னேற்றம்" ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

சுயாதீன விசாரணைகள் மற்றும் வழக்குத் தொடர உதவும் புதிய சட்டத்தின் மூலம் ஊழல் எதிர்ப்பு இயக்கம் வலுப்படுத்தப்பட்டுள்ளது. இது ஏற்கனவே முக்கிய தண்டனைகளுக்கு வழிவகுத்துள்ளது.

சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) ரத்து செய்து புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தால் மாற்றுவதற்கான பணிகளும் நடந்து வருகின்றன. இணையவழி பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தங்கள் பரந்த ஆலோசனைகள் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன.

இலங்கையின் நீதித்துறை சுதந்திரத்தை நிரூபித்துள்ளது. இதற்கு அண்மைய நீதிமன்ற தீர்ப்புகள் ஆதாரமாக மேற்கோள் காட்டமுடியும்.

2019 உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புகள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு எதிரான தாக்குதல்கள் உள்ளிட்ட நீண்டகால வழக்குகளில் விசாரணைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.

நீதித்துறை மேற்பார்வையின் கீழ் நடத்தப்படும் செம்மணி மனித புதை குழி அகழ்வுக்கு தேவையான வளங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை நிறுவுவதற்கான ஆலோசனைகள் நடந்து வருகின்றன. அதே நேரத்தில் நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வு குறித்த தேசிய கொள்கை மற்றும் செயல் திட்டத்தை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.

சிவில் சமூகத்திற்கான இடத்தை உறுதி செய்ய சட்ட அமுலாக்க நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்களை பிறப்பிக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் உள்ள மக்கள் தற்போது தடையின்றி அன்புக்குரியவர்களை நினைவுகூர முடியும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மோதலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பெரும்பாலான காணிகள் அசல் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. விடுவிக்க முடியாத இடங்களுக்கு இழப்பீடு வழங்கப்படுகிறது.

இந்த தொலைநோக்கு பார்வைக்கு இணங்க, பன்முகத்தன்மை மற்றும் நல்லிணக்கத்தைக் கொண்டாடுவதற்கு டிசம்பர் முதல் வாரம் இலங்கை தினமாக அனுஷ்டிக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.

இலங்கையின் முன்னேற்றத்தை அங்கீகரித்து, தேசிய செயல்முறைகள் மூலம் நல்லிணக்கத்தை முன்னேற்றுவதற்குத் தேவையான நேரத்தையும் இடத்தையும் வழங்குமாறு மனித உரிமைகள் பேரவையையும் சர்வதேச சமூகத்தையும் இலங்கை அரசாங்கம் வலியுறுத்துகிறது.

அனைத்து இலங்கையர்களின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வைப் பாதுகாக்க இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்ப்பைப் பயன்படுத்த தொடர்ச்சியான ஆதரவை இலங்கை கோருவதாகவும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டார்.


 

Post a Comment

Recent News

Recent Posts Widget