Ads (728x90)

சீனோர் நிறுவனத்தினுடைய (Cey-Nor foundation Ltd) யாழ்ப்பாணம்-காரைநகர் பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலையின் தொழிற்பாடுகள் இன்று துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

இத்தொழிற்சாலை பைபர் (Fiber) மூலப்பொருளைக் கொண்டு அனைத்து வகையான பொருட்களையும் உற்பத்தி மற்றும் பரும்படியாக்கம் செய்து சந்தைப்படுத்தும் செயன்முறையை மேற்கொள்ளவுள்ளது.

முன்னோட்டமாக படகு, மீன் விற்கும் தாங்கி, மீன் குஞ்சு வளர்ப்புத் தொட்டி என்பன உற்பத்தி செய்யப்படவுள்ளன.

இந்தியா வழங்கிய 330 மில்லியன் நிதி உதவியின் கீழ் இன்று இதன் புனரமைப்பு பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் சாதாரண கட்டுமரம் அளவிலான தோணி முதல் 30 அடி நீளமான படகுகள், 1 - 2 மீற்றர் வரையான விட்டம் கொண்ட மீன் வளர்ப்புத் தொட்டிகள், மீன் விற்கும் வண்டிகளில் பொருத்துவதற்கான குளிரூட்டக்கூடிய பெட்டி என்பன இங்கு தயாரிக்க ஏற்பாடுகள் பூர்த்தியாகியுள்ளது.

கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் செயலாளர் கோலித்த கமல் ஜினதாச, தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சின் அதிகாரிகள், சீ நோர் நிறுவனத்தின் அதிகாரிகள் ஆகியோர் நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget