Ads (728x90)

போதைப்பொருள் வியாபாரத்துக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் தொடர்புள்ளது என்பதை நாட்டு மக்கள் வெகுவிரைவில் அறிந்து கொள்வார்கள் என வர்த்தகத்துறை மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஊழல்வாதிகளுக்கு சட்டத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கும் போது எதிர்க்கட்சிகள் அனைத்தும் தற்போது ஒன்றிணைந்துள்ளன. எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் அனைவரும் நண்பர்கள் என்பதை நாட்டு மக்கள் இதனூடாக விளங்கிக் கொள்ள வேண்டும். இவர்கள் ஆட்சியில் இருந்தால் அவர்களின் நண்பர்களான ஊழல்வாதிகள் அனைவரும் பாதுகாக்கப்படுவார்கள்.

ஊழல் மோசடியினால் தான் இந்த நாடு வங்குரோத்து நிலையடைந்தது. ஆகவே ஊழல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் போது அதனை அரசியல் பழிவாங்கள் என்று எவ்வாறு குறிப்பிடுவது.

பாதாளக் குழுக்களின் முன்னிலை தரப்பினரை கைது செய்தவுடன் ஒரு சில அரசியல்வாதிகள் கலக்கமடைந்துள்ளார்கள். இதனையும் அரசியல் பழிவாங்கல் என்று எதிர்க்கட்சியினர் குறிப்பிடாமல் இருப்பது ஆச்சரியத்துக்குரியது.

பாதாளக் குழுக்களின் முன்னிலை தரப்பினர் கைது செய்யப்பட்டு அவர்களினால் வெளிப்படுத்தப்படும் விடயங்களால் ஜனாதிபதி கனவு காண்பவர்கள் தற்போது அச்சமடைந்துள்ளார்கள். இவர்கள் தான் கடந்த காலங்களில் பாதாளக்குழுக்களை போசித்தார்கள். அதன் விளைவையே நாடு இன்று எதிர்கொள்கிறது என்றார்.


 

Post a Comment

Recent News

Recent Posts Widget