Ads (728x90)

பொருளாதார நெருக்கடி காரணமாக 2022 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கடவத்தை - மீரிகம இடையேயான மத்திய அதிவேக நெடுஞ்சாலைப் பிரிவின் கட்டுமானப் பணிகள் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுடன் தொடர்புகளைப் பேணிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

மத்திய அதிவேக நெடுஞ்சாலை திட்டத்தின் கடவத்தை முதல் மீரிகம வரையிலான பகுதியின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரைத்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

சமீபத்தில் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட குற்றக் குழு உறுப்பினர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து குறித்த விபரங்கள் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் 50% க்கும் மேற்பட்ட போதைப்பொருள் நடவடிக்கைகளுக்கு இந்தக் குற்றக் குழு பொறுப்பேற்றுள்ளது.

இந்த நிலத்தடி அரசை நாங்கள் முற்றிலுமாக முடிவுக்குக் கொண்டுவருவோம். தற்போது கைது செய்யப்பட்டவர்கள் நம் நாட்டில் 50 சதவீத போதைப்பொருள் வலையமைப்பைக் கையாண்டுள்ளனர். 

வரி வசூலிப்பது போலவே, சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த குற்றக் குழு உறுப்பினர்களின் வீடுகளுக்கு ஒவ்வொரு மாதமும் சென்று பணம் பெற்றுள்ளனர். சில அமைச்சர்கள் அவர்களை ஒவ்வொரு மாதமும் தங்கள் வீடுகளுக்கு அழைத்து வந்துள்ளனர்.

பொதுமக்களிடமிருந்து ஒரு ரூபாவைக் கூட நாங்கள் வீணாக்கவில்லை. அரசு இயந்திரத்தில் இன்னும் பழைய பழக்கங்களுக்கு அடிமையாகி இருக்கும் சிலர் இருக்கிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். இவர்கள் புதிய அரசியலுக்கு ஏற்ப மாற வேண்டும். அல்லது அவர்கள் வெளியேற வேண்டும். 

குறித்த நபர்கள் நாட்டில் ஒரு பெரிய வலையமைப்பை உருவாக்கியுள்ளதாகவும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி உறுதியளித்துள்ளார். 


Post a Comment

Recent News

Recent Posts Widget