Ads (728x90)

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பான புதிய நிலைவரத்தை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ளது.

தற்போதைய பாதிப்பு நிலைவரங்களின் படி நாட்டின் 25 மாவட்டங்களும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதுடன் 179,868 குடும்பங்களைச் சேர்ந்த 646,567 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் தற்போது 488 தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். நாடளாவிய ரீதியில் 132 பேர் உயிரிழந்துள்ளதுடன் 176 பேர் காணாமல்போயுள்ளனர்.

குருநாகல் இந்துல்கொட, இப்பாகமுவ மற்றும் பல்லியத்த பகுதிகளில் ஏற்பட்ட 3 மண்சரிவுகளில் 9 பேர் உயிரிழந்தனர். 

மேலும் இந்த அனர்த்தத்தில் 24 பேர் காணாமல் போயுள்ளதாக குருநாகல் மாவட்ட செயலாளர் சந்தன திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் நிலவும் சீரற்ற காலநிலையால், வரகாபொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துல்ஹிரிய, மொன்ரோவியா தோட்டம் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த மண்சரிவில் சுமார் 21 பேர் காணாமல் போயுள்ளனர். 

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக களனி கங்கை மற்றும் களு கங்கையை அண்டிய பிரதேசங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

களனி கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் அடுத்த 48 மணிநேரத்துக்குள் களனி கங்கையை அண்டிய பிரதேசங்களுக்கே வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளது.

களு கங்கை மற்றும் களனி கங்கையை அண்டிய பிரதேசங்களில் வாழும் மக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு நீர்ப்பாசன திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது

மகாவலி கங்கையின் நீரேந்து பகுதிகளில் பெய்த அதிக மழையின் காரணமாக, மகாவலி ஆற்றுப் படுகையின் கீழ் கரையோரப் பகுதிகளில் நிலவும் வெள்ள நிலைமை அதி தீவிர வெள்ள நிலைமையாக அதிகரிக்கக்கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது. 

திம்புலாகல, தமன்கடுவ, வெலிகந்தை, லங்காபுர, மெதிரிகிரிய, சேருவில, கந்தளாய், கின்னியா மற்றும் மூதூர் ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் முடிந்தவரை விரைவாக அந்தப் பிரதேசங்களை விட்டு வெளியேறுமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவுறுத்துகிறது.


Post a Comment

Recent News

Recent Posts Widget