Ads (728x90)

"தித்வா" புயலானது நேற்று இரவு 11.30 மணிக்கு திருகோணமலைக்கு வடமேற்காக சுமார் 70 கிலோ மீற்றர் தொலைவில் மையம் கொண்டிருந்ததாக, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அது வடக்கு, வடமேற்குத் திசையில் நகரக் கூடிய சாத்தியம் அதிகமாகக் காணப்படுவதுடன், நாளை தமிழ்நாடு கரையை அடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இவ்விடயம் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் வழங்கப்படும் எதிர்கால முன்னறிவிப்புகள் மற்றும் அறிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நாட்டில் தற்போது நிலவும் மோசமான வானிலை நிலைமை நாளை 30 ஆம் திகதி அளவில் கணிசமாகக் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய, மத்திய, வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் சில இடங்களில் 100 மி.மீ இற்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சிக்கான சாத்தியம் காணப்படுகின்றது.

சப்ரகமுவ, மேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் மிகப் பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுவதுடன், காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 80-90 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பலத்த காற்று மற்றும் பலத்த மழைவீழ்ச்சி தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


Post a Comment

Recent News

Recent Posts Widget