Ads (728x90)

பேரனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் 300,000 டொலர் நிதியுதவியை வழங்கியுள்ள ஆசிய அனர்த்த முன்னாயத்த நிலையம், தேசிய அனர்த்த முன்னாயத்த மற்றும் முற்கூட்டிய எச்சரிக்கைக் கட்டமைப்பை மேம்படுத்தவேண்டியதன் அவசியம் குறித்து வெளிவிவகார அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளது.

தித்வா சூறாவளி காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அனர்த்தங்களில் சிக்கி பல நூற்றுக்கணக்கானோர் பலியாகியிருப்பதுடன், இலட்சக்கணக்கானோர் தமது இருப்பிடங்களையும் வாழ்வாதாரத்தையும் இழந்து வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் ஆசிய அனர்த்த முன்னாயத்த நிலையத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் அஸ்லாம் பர்வைஸ் 300,000 டொலர் நிதியுதவியை வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத்திடம் வழங்கியுள்ளார்.

இதன்போது பேரனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு நன்கொடை உதவிகளை வழங்கியமைக்கும், தேசிய அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்துடன் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி நாட்டுக்கு அவசியமான தொழில்நுட்ப உதவிகளை வழங்கியமைக்கும் ஆசிய அனர்த்த முன்னாயத்த நிலையத்துக்கு இலங்கை அரசாங்கத்தின் சார்பில் அமைச்சர் விஜித்த ஹேரத் தனது நன்றியை தெரிவித்தார்.

அதற்குப் பதிலளித்த ஆசிய அனர்த்த முன்னாயத்த நிலையத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் அஸ்லாம் பர்வைஸ், பேரனர்த்தத்தின் பின்னரான இலங்கையின் மீட்சி முயற்சிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதற்கும், அவசியமான தொழில்நுட்ப உதவிகளைத் தொடர்ந்து பெற்றுக்கொடுப்பதற்கும் தாம் தயாராக இருப்பதாக உறுதியளித்தார்.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget