Ads (728x90)

மக்களுக்கு சிறப்பான சுகாதார சேவையைப் பெற்றுக்கொள்வதை உறுதிப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் 1,000 சுகாதார மற்றும் நல்வாழ்வு மையங்களை நிறுவும் பிரம்மாண்டமான திட்டத்தின் இரண்டாம் கட்டம் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில், களுத்துறை மாவட்டத்தின் கனன்வில மற்றும் ஹீனடியங்கல ஆகிய இடங்களில் இந்த மையங்கள் திறந்து வைக்கப்பட்டன.

இரண்டாம் கட்டத்தின் கீழ் 21 மாவட்டங்களில் ஒரே நேரத்தில் 42 மையங்கள் திறக்கப்பட்டன. இதன் மூலம் நாட்டில் தற்போது இயங்கும் இத்தகைய மையங்களின் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது.

இந்த புதிய கட்டமைப்பின் ஊடாக நாட்டின் மக்கள் தொகையில் சுமார் 247,251 பேரை சுகாதார மையங்களுடன் இணைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

நாட்டில் பதிவாகாத நோயாளிகள் உட்பட தொற்றாத நோய்களின் தாக்கம் மிக அதிகமாக இருப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். குறிப்பாக, நவீன மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகள் வழங்கப்பட்ட போதிலும், 80 முதல் 85 சதவீதமான உயிரிழப்புகள் தொற்றாத நோய்களினால் ஏற்படுகின்றன என அவர் கவலை வெளியிட்டார். 

இதனைத் தடுக்கும் வகையில் வருங்காலத்தில் ஒரே கருவி மூலம் பல அடிப்படை பரிசோதனைகளைச் செய்யக்கூடிய நவீன தொழில்நுட்பம் இந்த மையங்களுக்கு அறிமுகப்படுத்தப்படவுள்ளது என்றார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget