Ads (728x90)

வங்காள விரிகுடாவின் தென்கிழக்கே உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி எதிர்வரும் 12 மணித்தியாலங்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

குறித்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு நோக்கி நகர்ந்து பின்னர் நாட்டின் கிழக்கு கடற்கரையை அண்மிக்கும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனால் இன்று முதல் மழையுடனான வானிலை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழையுடனான வானிலை அதிகரிக்கக்கூடும்.

ஊவா மாகாணம் மற்றும் மட்டக்களப்பு, அம்பாறை, பொலன்னறுவை, மாத்தளை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் இடைக்கிடையே 50 மில்லி மீட்டர் அளவிலான பலத்த மழை பெய்யும் என திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இதேவேளை தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் யாழ். மாவட்டத்தில் 650 மில்லி மீற்றருக்கும் மேல் மழை பெய்யும் என யாழ். பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரித்துள்ளார். 

இதன் தாக்கம் யாழ். மாவட்டம் இதுவரை எதிர்கொள்ளாத அளவு பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதன் நகரும் பாதை கடல் பகுதியாக இருந்தாலும். வடக்கு நோக்கி நகரும் போது தரையையும் ஊடறுத்துச் செல்லவுள்ளது. அத்துடன் மிக குறைந்தளவு வேகத்தில் நகர்வதால் எதிர்வரும் 8,9,10 ஆம் திகதிகளில் கிழக்கு மாகாணம் பாரியளவு மழைவீழ்ச்சியை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது.

அத்துடன் 9,10 ஆம் திகதிகளில் யாழ் மாவட்டம் மிக அதிக மழைவீழ்ச்சியை எதிர்கொள்ள உள்ளது. இதன் தாக்கம் தித்வா புயலால் தென்பகுதி எதிர்கொண்ட பேரழிவுகளை விட அதிகமாக இருக்கும் எனவும் எதிர்வு கூறியுள்ளார்.



Post a Comment

Recent News

Recent Posts Widget