ஐரோப்பிய நாடுகளில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் நிதி தொடர்ந்தும் முடக்கப்பட்டே இருக்கும் என்று ஐரோப்பிய ஒன்றியம் நேற்று வெளியிட்டுள்ள சிறப்பு அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் பேரவை, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பையும் பயங்கரவாதத்துடன் தொடர்புடைய அமைப்புக்கள் பட்டியலில் 2006ஆம் ஆண்டு இணைத்தது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு இதற்கு எதிராக ஆரம்பத்தில் நீதிமன்ற நடவடிக்கை எடுத்திருந்தபோதும், பின்னர் அது தொடர்பில் கரிசனை காட்டவில்லை.
ஐரோப்பிய பொது நீதிமன்றம் 2014ஆம் ஆண்டு நடைமுறைக் குறைபாடுகள் காரணமாகத் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடுப்பு நடவடிக்கைகளை நிறுத்தியிருந்தது. எனினும் எதிர்காலத்தில் நிதிகளை முடக்குவதற்கான சாத்தியக்கூறுகளை கருத்தில்கொண்டு நிறுத்தப்பட்ட நடவடிக்கைகளின் விளைவுகளைத் தொடர்ந்தும் பேணுவதற்குப் பொது நீதிமன்றம் தீர்மானித்திருந்தது.
இந்த நிலையில் ஐரோப்பிய நீதிமன்ற ஆயம், தமிழீழ விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த அமைப்பை ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாதத் தடைப் பட்டியலில் ஏன் வைத்திருக்கின்றது என்பதை ஐரோப்பிய ஒன்றிய பேரவை தெளிவுபடுத்தத் தவறிவிட்டதாகக் குறிப்பிட்டிருந்தது. இதனடிப்படையில் விடுதலைப் புலிகளைத் தடைப் பட்டியலில் இருந்து நீக்கியதுடன், நிதிகளையும் விடுவித்தது.
இதன் பின்னர், ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்ட தெளிவுபடுத்தல் அறிக்கையில், 2011ஆம் ஆண்டு தொடக்கம் 2015ஆம் ஆண்டு வரையிலான காலப் பகுதிக்கே, ஐரோப்பிய நீதிமன்ற ஆயத் தீர்ப்பு பொருந்தும் என்று குறிப்பிட்டிருந்தது.
இதேவேளை, ஐரோப்பிய ஒன்றியப் பேரவை 2016ஆம் ஆண்டு ஜூலை மாதம் மற்றும் 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதியை ஐரோப்பிய நாடுகளில் முடக்கி வைக்கத் தீர்மானித்திருந்தது.
இதற்கு அமைவாக, ஐரோப்பிய ஒன்றிய நீதி ஆயத்தின் தீர்ப்பினால் விடுதலைப் புலிகளின் நிதி விடுவிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் எதிர்காலத்தில் ஐரோப்பிய ஒன்றியம் மறு ஆய்வு மேற்கொள்ளும்போது, ஐரோப்பிய ஒன்றிய நீதி ஆயம் வழங்கிய தீர்ப்பை கவனத்தில் எடுக்க வேண்டிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment