நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும் என்பார்கள். ஆனால், நாம் ஒன்று நினைக்க மக்கள் ஒன்று நினைப்பார்கள், அதுதான் 'பிக் பாஸ்'. ஹிந்தியில் பல வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சி தமிழில் ஒரு மாதத்திற்கு முன்பு ஆரம்பமானது. இந்தியத் திரையுலகத்தில் தனக்கென தனி இடம் பிடித்து வைத்துள்ள கமல்ஹாசன் முதல் முறையாக டிவி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியதால் இந்த நிகழ்ச்சியை மக்கள் பார்க்க ஆரம்பித்தனர். ஆனால், போகப் போக கமல்ஹாசன் இடத்தை ஓவியா பிடித்துக் கொண்டார் என்பதே உண்மை.
வாரம் இரு முறை வரும் கமல்ஹாசனை விட தினமும் வரும் ஓவியா அவருடைய யதார்த்தமான நடவடிக்கைகளால் முத்திரை பதிக்க ஆரம்பித்தார். அவர் அழுதால் கூட ஆறுதல் சொல்ல தயாராக இருக்கிறது ஒரு கூட்டம். எப்போதுமே நடிப்பவர்களைக் கண்டால் பலருக்கும் பிடிக்காது, நான் நானாகவே இருக்கிறேன் என்பவர்களைப் பலருக்கும் பிடிக்கும். அதுதான் ஓவியா விஷயத்தில் நடந்து வருகிறது. அடுத்தவர்களைப் பற்றி புறம் பேசாத ஒரு 'குவாலிட்டி'யே ஓவியாவிற்கு பல ரசிகர்கள் குவிய காரணமாக அமைந்தது.
கடந்த வாரம் 'பிக் பாஸ்' வீட்டில் ஓவியாவைப் பலரும் 'கார்னர்' செய்ததையடுத்து ரசிகர்கள் பொங்கி எழுந்தார்கள். ஓவியாவுக்கு ஏதாவது ஒன்று என்றால் நிகழ்ச்சியையே பார்கக் மாட்டோம் என வெகுண்டெழுந்தார்கள். கடைசியில் கமல்ஹாசனின் பஞ்சாயத்தால் அது ஒரு முடிவுக்கு வந்தது.
ஆனால், நேற்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் திடீரென காயத்ரிக்கும், ஓவியாவிற்கும் சமாதானம் செய்து வைக்கும் வேலையில் பிக் பாஸ் இறங்கியிருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்தனை நாட்களாக ஓவியாவை கண்ட கண்ட கெட்ட வார்த்தைகளில் திட்டிக் கொண்டிருந்த காயத்ரிக்கு திடீரென ஒரு நல்வழிப் பாதையைக் காட்ட பிக் பாஸ் முயற்சிக்கிறார் என ரசிகர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
பரணியை அனைவரும் 'கார்னர்' செய்த போது இப்போது காயத்ரி விஷயத்தில் தலையிட்டு சரி செய்ய முயல்வது போல அப்போதே செய்திருக்கலாமே என்கிறார்கள்.
இதனிடையே, சில நாட்களுக்கு முன்பு காயத்ரியின் அம்மா நடன இயக்குனர் கிரிஜா ரகுராம், சித்தி நடன இயக்குனர் கலா ஆகிய இருவரும் கமல்ஹாசனிடம் சென்று காயத்ரியை இப்படி பிக் பாஸ் நிகழ்ச்சியில் வேண்டுமென்றே தவறாகக் காட்டுகிறீர்கள் என சண்டை போட்டார்களாம். ஆனால், கமல்ஹாசன் தனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்று சொல்லிவிட்டதாகத் தகவல்.
நிகழ்ச்சியின் ஆரம்பத்திலிருந்தே கமல்ஹாசன் தயவில்தான் காயத்ரி, வையாபுரி, கணேஷ் வெங்கட்ராமன் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாகக் கலந்து கொண்டார்கள் என்ற ஒரு தகவலும் உண்டு.
ஓவியாவிற்கு கிடைத்து வரும் ஆதரவால் கமல்ஹாசன் கூட கொஞ்சம் கலங்கித்தான் போயிருக்கிறார் என்கிறார்கள். அதனால், வரும் நாட்களில் ஓவியாவின் புகழைக் குறைக்கும் வேலைகள் அரங்கேறலாம்.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment