பெரியோரை மதிப்புடன் நடத்தும் மேஷ ராசி அன்பர்களே!
ராகு சிம்ம ராசியில் இருந்து 4-ம் இடமான கடகத்திற்கு வருவதால் குடும்ப பிரச்னை மறையும். அதே நேரம் வீண் அலைச்சல் உருவாகலாம்.
கும்பத்தில் உள்ள கேது, 10-ம் இடமான மகரத்திற்கு செல்வதால் உடல் உபாதை ஏற்படலாம். ஆனால் பிற்பகுதியில் முயற்சியில் வெற்றியும், ஜோரான வளர்ச்சியும் உண்டாகும்.
ராசிக்கு 8ல் உள்ள சனிபகவான், முயற்சியில் தடை உருவாக்கலாம். சிலர் ஊர்விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகும். அவர் 2017 டிச. 18- ல் 8-ம் இடத்தில் இருந்து 9-ம் இடத்திற்கு மாறுகிறார். அதனால் முயற்சியில் தடை வரலாம். எதிரிகளின் தொல்லை தலைதூக்கும். பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும்.
குரு பகவான் சாதகமாக இல்லா விட்டாலும் அவரது 9-ம் பார்வையால் நன்மை கிடைக்கும். மனதில் துணிச்சல் பிறக்கும்.
பண வரவு கூடும். அவர் 2017 ஆக. 31- வரை கன்னி ராசியில் இருப்பார். அதன் பிறகு வக்ர நிவர்த்தியாகி 7-ம்இடத்திற்கு செல்கிறார். இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். சுப நிகழ்ச்சி நடந்தேறும். பணப்புழக்கம் அதிகரிக்கும். 2018 பிப். 13-ல் 8-ம் இடத்திற்கு மாறுகிறார். அப்போது அவரால் நன்மை தர இயலாது. 8-ம் இடத்தில் இருக்கும் குருவால் மன வேதனை, நிலையற்ற தன்மை உண்டாகும். பொருளாதார சரிவு ஏற்படலாம். ஆனால் அவரது 7-ம் பார்வையால் ஆற்றல் மேம்படும். இனி காலவாரியான பலனைக் காணலாம்.
2017 ஜூலை – டிசம்பர் குடும்பத்தின் தேவை பூர்த்தியாகும். கணவன், -மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்லவும். வீடு, மனை வாங்கும் எண்ணம் தடை படலாம். ஆக. 31 க்கு பிறகு குடும்பத்தில் குதூகுலம் உண்டாகும். தடைபட்ட திருமணம் போன்ற சுபநிகழ்ச்சி நடந்தேறும். தொழில், வியாபாரத்தில் சீரான லாபம் கிடைக்கும். எதிரி தொல்லையை சாதுர்யமாக முறியடிப்பீர்கள். பணியாளர்கள் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படலாம். ஆக.31க்கு பிறகு பதவி உயர்வு கிடைக்கும்.
கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் பெற விடாமுயற்சி தேவை. விருது, பாராட்டு போன்றவை தள்ளிப் போகலாம். அரசியல்வாதிகள் கடினமாக உழைக்க
வேண்டியிருக்கும். பணப்புழக்கத்திற்கு குறைவிருக்காது.மாணவர்கள் முயற்சிக்கேற்ற வளர்ச்சி காண்பர். சிலர் படிப்புக்காக வெளிநாடு செல்ல வாய்ப்புண்டு. விவசாயிகளுக்கு மானாவாரி பயிர்களில் நல்ல மகசூல் கிடைக்கும். பெண்கள் பிறந்த வீட்டினரின் உதவி கிடைக்கப் பெறுவர். 2018 ஜனவரி –2019 பிப்ரவரி ராகுவால் அவ்வப்போது பிரச்னை உருவாகலாம். குரு பகவான் -2018 ஏப்.9 முதல் 2018 வரை வக்கிரம் அடைந்து துலாம் ராசிக்கு மாறியபின் நன்மை மேலோங்கும்.பணப்புழக்கம் அதிகரிக்கும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். புதிய வீடு, வாகனம் வாங்கலாம்.
தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காணலாம். பணியாளர்களுக்கு அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். அரசியல்வாதிகள் பதவி உயர்வு பெறுவர். மாணவர்கள் போட்டியில் பங்கேற்று வெற்றி காண்பர். விவசாயிகள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். ஆனால் அதற்கு ஏற்ப வருமானம் கிடைக்காமல் போகாது. பெண்களுக்கு குழந்தைகளால் பெருமை சேரும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர்.
பரிகாரம்: ராகு காலத்தில் பைரவருக்கு அர்ச்சனை செவ்வாய், வெள்ளியில் காளி வழிபாடு சனிக்கிழமையில் அனுமனுக்கு தீபம்
தன்னம்பிக்கையுடன் செயல்படும் ரிஷப ராசி அன்பர்களே!
ராகு, கேது பெயர்ச்சியால் வாழ்வில் நற்பலன் அதிகரிக்கும். சிம்மத்தில் உள்ள ராகு, 3-ம் இடமான கடகத்திற்கு வருவதால் முயற்சியில் வெற்றி, பொருளாதார வளம் சிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் தொழிலில் வளர்ச்சியும் உண்டாகும். ராகு நன்மை தரும் போது கேதுவால் நன்மை தர இயலாது. தற்போது கும்பத்தில் இருக்கும் கேது, 9-ம் இடமான மகரத்திற்கு போகிறார். அவரால் உடல்நலக்குறைவு, பொருள் இழப்பு ஏற்படலாம். விருச்சிகத்தில் உள்ள சனி, 2017 டிச. 18-ல் 8-ம் இடத்திற்கு செல்கிறார். இதுவும் சிறப்பான இடம் அல்ல. அஷ்டமத்து சனி என்பதால், முயற்சியில் தடைகளை உருவாக்குவார்.
குருபகவான் 5-ம் இடமான கன்னி ராசியில் இருப்பது சிறப்பான இடம். அவர் முயற்சியில் வெற்றியும்,பொருளாதார வளர்ச்சியும் தருவார். 2017 ஆக. 31- வரை அந்த ராசியில் இருப்பார். அதன் பிறகு 6-ம் இடத்திற்கு மாறுவதால் நன்மை குறையும். அவரது 9-ம் பார்வை மூலம் இடையூறை வெல்லும் ஆற்றல் உண்டாகும். 2018 பிப்.13-ல் 7-ம் இடத்திற்கு மாறுகிறார். அதன் பின் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். இனி காலவாரியான பலனைக் காணலாம். 2017 ஜூலை – டிசம்பர் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன், -மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். பிரிந்த குடும்பம் ஒன்று சேரும். உறவினர்கள் உங்களைத் தேடி வருவர். தடைபட்ட திருமணம் இனிதே கை கூடும். அதுவும் நல்ல வரனாக அமையும். குழந்தை பாக்கியம் உண்டாகும். தற்போது இருப்பதை விட வசதியான வீட்டிற்கு குடிபுகுவர்.
தொழில், வியாபாரம் வளர்ச்சியடையும். புதிய வியாபாரத்தில் ஓரளவு லாபம் கிடைக்கும். கூட்டாளிகள் இடையே ஒற்றுமை சிறக்கும். அரசு வகையில் நன்மை எதிர்பார்க்கலாம். ஆனால் 2017 ஆக. 31- க்கு பிறகு மனதில் சற்று தளர்ச்சி உருவாகலாம். பணியாளர்களுக்கு பின் தங்கிய நிலை மறையும். வேலையின்றி இருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். 2017 ஆக. 31-க்கு பிறகு அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர். சிலர் அரசிடம் இருந்து விருது பெற வாய்ப்புண்டு. அரசியல்வாதிகள் சீரான வளர்ச்சி காண்பர். மாணவர்களுக்கு மதிப்பெண் கூடுதலாக கிடைக்கும். சிலர் வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்பை பெறுவர். விவசாயிகளுக்கு நெல், சோளம் போன்ற வகைகளில் அதிக மகசூல் கிடைக்கும். வழக்கு விவகாரத்தில் முடிவு சாதகமாக இருக்கும். பெண்களுக்கு குடும்ப வாழ்வு சிறக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் நல்ல வளர்ச்சி காண்பர்.
2018 ஜனவரி – 2019 பிப்ரவரி ராகுவால் தொழில் வளர்ச்சி மூலம் ஆதாயம் அதிகரிக்கும். கேதுவால் சிலரது வீட்டில் பொருட்கள் களவு போக வாய்ப்புண்டு. பயணத்தின் போது சற்று கவனம் தேவை. பகைவர் தொல்லை மறையும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் பெறும். பணியாளர்கள் 2018 பிப்.13 க்கு பிறகு பணியிடத்தில் செல்வாக்குடன் திகழ்வர். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். அதிகாரிகளின் ஆதரவு சிறப்பாக இருக்கும். 2018 ஏப். 9- முதல் 2018 செப். 3- வரை வேலைப் பளு, அலைச்சல் ஏற்படலாம். அதிகாரிகளிடம் அனுசரித்துப் போகவும். கோரிக்கைகள் நிறைவேறுவதில் தாமதம்
ஏற்படலாம். முக்கிய பொறுப்புகளை பிறரிடம் ஒப்படைக்காமல் இருப்பது நல்லது. கலைஞர்களுக்கு 2018 ஏப். 9- முதல் 2018 செப். 3- வரை புதிய ஒப்பந்தம்
பெறுவதில் தாமதம் ஏற்படும். அரசியல்வாதிகள் கட்சியில் புதிய பொறுப்பு கிடைக்கப் பெறலாம்.
மாணவர்கள் குருபலத்தால் முயற்சிக்கு ஏற்ப நற்பலன் காண்பர். பெற்றோர்களின் அறிவுரை கை கொடுக்கும். 2018 ஏப். 9- முதல் 2018 செப். 3- வரை விடாமுயற்சியுடன் படிக்க வேண்டியதிருக்கும். விவசாயிகள் பழவகைகள், காய்கறிகள், கீரை வகைகள் போன்றவற்றில் நல்ல மகசூல் காண்பர். புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும். பெண்கள் கணவன் மற்றும் குடும்பத்தாரிடம் நற்பெயர் பெறுவர். குழந்தைகளால் பெருமை உண்டாகும்.
பரிகாரம்:செவ்வாயன்று கேதுவுக்கு அர்ச்சனை வியாழனன்று தட்சிணாமூர்த்திக்கு தீபம் விநாயகருக்கு அருகம்புல் சாத்துதல்
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment