நாம் முன்னெடுத்துவரும் பொருளாதார நகர்வுகள் மற்றும் சர்வதேச நாடுகளுடன் நாம் செய்துகொண்டுள்ள பொருளாதார உடன்படிக்கைகளின் மூலமாக இலங்கை கடன் சுமைகளில் இருந்து விரைவாக விடுதலையடைய முடியும். 2020 ஆம் ஆண்டில் நாம் எமது கடன் சுமைகளை வெகுவாக குறைத்துக்கொள்ள முடியும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
2020 இல் நாட்டின் தேசிய உற்பத்தியை 3.3 வீதமாக மாற்றவே முயற்சிக்கின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
வலுவான பொருளாதாரத்தை உருவாக்குதல் என்ற செய்தியாளர் சந்திப்பு நேற்று மத்திய வங்கியில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
இந்த ஆண்டில் ஏற்பட்ட அனர்த்தத்தின் பின்னர் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் எனவும் தேசிய உற்பத்தி வீழ்ச்சியடையும் என்ற அச்சம் இருந்தது.
எனினும் இந்த ஆண்டில் அவ்வாறான எந்தவித சம்பவங்களும் இடம்பெறவில்லை. சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையின் பிரகாரம் இலங்கையின் பொருளாதார செயற்பாடுகளில் திருப்தி ஏற்பட்டுள்ளதாகவும், நாட்டின் காலநிலை மாற்றம் மூலமான பாதிப்புகள் ஏற்பட்ட போதிலும் பொருளாதார நகர்வு சீராகவே அமைந்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது.
ஆகவே கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகைகையில் பொருளாதார வளர்ச்சி வீதம் சமமானதாக அல்லது அதனுடன் சற்று கூடிய தன்மையில் உள்ளது.
சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்காக ஒதுக்கிய 501.5 மில்லியன் அமெரிக்க டொலர்களின் இரண்டாம் கட்ட நிதியான 167.2 மில்லியன் அமெரிக்க டொலர்களை எமக்கு வழங்க தீர்மானித்துள்ளது. எமது பொருளாதார நகர்வுகளின் நேர்த்தி காரணமாகவே இந்த நிதி எமக்குக் கிடைக்கின்றது. கடந்த காலத்தில் நாம் கையாண்ட வரிக் கொள்கை, வரவுசெலவு திட்ட சமநிலைத்தன்மை ஆகியவற்றின் விளைவுகளே இன்று எமக்கு மீண்டும் மிகப்பெரிய தொகை நிதி கிடைக்க காரணமாக அமைந்துள்ளன. நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதில் பல்வேறு நகர்வுகளை நாம் கையாண்டு வருகின்றோம். இப்போது நாம் அபிவிருத்தி மூலமான பொருளாதார வளர்ச்சியை அடையவே முயற்சித்து வருகின்றோம். அதில் இருந்து விலகிக்கொள்ள நாம் தயாராக இல்லை.
ஆகவே எமது பொருளாதார வளர்ச்சி 6 வீதம் அளவில் அதிகரிக்க வேண்டும் என்ற இலக்கை கொண்டே நாம் முன்னகர்ந்து செல்கின்றோம்.
எமது அபிவிருத்தித் திட்டங்களில் நேரடி சர்வதேச முதலீடுகளை அதிகரித்தல், தனியார் துறையை மேலும் பலப்படுத்தி பொருளாதாரத்தை உறுதிப்படுத்தல் மற்றும் அரச வருவாயை அதிகரித்தல் என்பனவற்றுக்கே நாம் முயற்சிக்கின்றோம். 2020 ஆம் ஆண்டில் நாட்டின் தேசிய உற்பத்தியை 3.3 வீதமாக மாற்றவே முயற்சிக்கின்றோம். அதிக தொகையில் கடன்களை வாங்கிகொண்டு அபிவிருத்தி செய்வதை விடவும் இந்த நாட்டின் தொழிற்சாலை, விவசாயத்தை பலப்படுத்தி இலங்கையை இந்து சமுத்திரத்தின் பலமான நாடாக மாற்றவே நகர்கின்றோம். ஆகவே நாம் 2020 ஆண்டில் எமது கடன் தொகையில் இருந்து விடுபடுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம்.
இன்று ஜி. எஸ்.பி பிளஸ் எமக்குக் கிடக்கப்பெற்றுள்ளது. இதன் மூலமாக எமது உற்பத்திகள் ஐரோப்பிய நாடுகளுக்கு வழங்கும் வாய்ப்புகள் கிடைத்துள்ளன. ஆறாயிரம் உற்பத்தி பொருட்களை நாம் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியும். ஆனால் எம்மால் இப்போது ஆறாயிரம் உற்பத்திகளை கொடுக்க முடியாவிட்டாலும் எமது நாட்டில் இருந்து குறைந்தது 100 தொடக்கம் 150 பொருட்களை உற்பத்தி செய்வதன் மூலமாக எமது பொருளாதாரத்தை உறுதிப்படுத்த வேண்டும்.
ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையை கொண்ட நாடுகளுக்கு பயணப்பொருட்களை அமெரிக்காவிற்கு கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய வாய்ப்பாக கருதப்பட வேண்டும்.
அதேபோல் இந்தியா, ஜப்பான், சீனா ஆகிய நாடுகளுடன் பொருளாதார உடன்படிக்கைகளை செய்து போட்டிகர பொருளாதார தன்மைகளை உருவாக்கவே நாம் முயற்சித்து வருகின்றோம். இதன் மூலமாக மட்டுமே கடன்களில் இருந்து எம்மால் விடுபட முடியும். அதற் கான புதிய வேலைத் திட்டங்களை நாம் முன்னெடுத்து வருகின்றோம் என்றார்.

Post a Comment