நாட்டின் 17 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள கடுமையான வரட்சியின் காரணமாக மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் வரட்சியினால் மாத்திரம் 3 இலட்சத்து 14 ஆயிரத்து 49 குடும்பங்களைச் சேர்ந்த 10 இலட்சத்து 93 ஆயிரத்து 717 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
வடக்கு, கிழக்கு மற்றும் வட மேல் மாகாணங்களிலேயே அதிகளாவானோர் வரட்சியினால் குடிநீரின்றி கடுமையான பாதிப்புக்களுக்கு முகங்கொடுத்துள்ளதாகவும், அவர்களுக்கான குடிநீரை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஊடக பேச்சாளர் பிரதிப் கொடிப்பிலி தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடமாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தில் 04 பிரதேச செயலகப்பிரிவைச் சேர்ந்த 24 ஆயிரத்து 06 குடும்பங்களில் வசிக்கும் 83 ஆயிரத்து 378 பேரும், வவுனியா மாவட்டத்தில் 04 பிரதேச செயலகப்பிரிவைச்சேர்ந்த 24 ஆயிரத்து 507 குடும்பங்களில் வசிக்கும் 85 ஆயிரத்து 771 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தின் 06 பிரதேச செயலகப்பிரிவைச்சேர்ந்த 35 ஆயிரத்து 730 குடும்பங்களில் வசிக்கும் ஒரு இலட்சத்து 15 ஆயிரத்து 308 பேரும், பாதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாண மாவட்டத்தின் 15 பிரதேச செயலகப்பிரிவைச்சேர்ந்த 34 ஆயிரத்து 49 குடும்பங்களில் வசிக்கும் ஒரு இலட்சத்து 24 ஆயிரத்து 206 பேரும், மன்னார்; மாவட்டத்தில் 05 பிரதேச செயலகப்பிரிவைச்சேர்ந்த 15 ஆயிரத்து 386 குடும்பங்களில் வசிக்கும் 52 ஆயிரத்து 152 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மாவட்டத்தில் 11 பிரதேச செயலகப்பிரிவைச்சேர்ந்த 27 ஆயிரத்து 646 குடும்பங்களில் வசிக்கும் 1 இலட்சத்து ஐயாயிரத்து 947 பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 09 பிரதேச செயலகப்பிரிவைச்சேர்ந்து 19 ஆயிரத்து 685 குடும்பங்களில் வசிக்கும் 65 ஆயிரத்து 341 பேரும், அம்பாறை மாவட்டத்தில் 09 பிரதேச செயலகப்பிரிவைச்சேர்ந்து 11 ஆயிரத்து 672 குடும்பங்களில் வசிக்கும் 40 ஆயிரத்து 548 பேரும் வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புத்தளம் மாவட்டத்தில் 13 பிரதேச செயலகப்பிரிவைச்சேர்ந்த 36 ஆயிரத்து 783 குடும்பங்களில் வசிக்கும் ஒரு இலட்சத்து 31 ஆயிரத்து 51 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வடமத்திய மாகாணத்தில் பொலன்னறுவை மாவட்டத்தின் 03 பிரதேச செயலகப்பிரிவைச்சேர்ந்த 6 ஆயிரத்து 556 குடும்பங்களில் வசிக்கும் 23 ஆயிரத்து 919 பேரும், அனுராதபுரம் மாவட்டத்தின்; 11 பிரதேச செயலகப்பிரிவைச்சேர்ந்த 16 ஆயிரத்து 729 குடும்பங்களில் வசிக்கும் 55 ஆயிரத்து 683 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய மாகாணத்தில் மாத்தளை மாவட்டத்தில் 05 பிரதேச செயலகப்பிரிவைச்சேர்ந்த 5 ஆயிரத்து 832 குடும்பங்களில் வசிக்கும் 20 ஆயிரத்து 341 பேரும் கண்டி மாவட்டத்தில் 02 பிரதேச செயலகப்பிரிவைச்சேர்ந்த 72 குடும்பங்களில் வசிக்கும் 300 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வடக்கு, கிழக்கு மற்றும் வட மேல் மாகாணத்திலேயே அதிகளவானோர் குறித்த வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது இயலுமானவரை பாதிக்கப்பட்டுள்ளோருக்கான குடிநீரை கொள்கலன்களில் மூலம் விநியோகிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. என்றார்.
இந்நிலையில் வடமாகாணத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீரைப் பெற்றுக் கொடுப்பதற்கு தேவையான நிதி மாவட்ட செயலாளர்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதன்படி யாழ்ப்பாண மாவட்டத்துக்கு 48 இலட்சம் ரூபாவும், முல்லைத்தீவு மாவட்டத்துக்கு 21 இலட்சம் ரூபாவும், கிளிநொச்சி மாவட்டத்துக்கு 30 இலட்சம் ரூபாவும், வவுனியா மாவட்டத்துக்கு மூன்றரை இலட்சம் ரூபாவும் வழங்கப்பட்டிருப்பதாக அவ்வமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
Post a Comment